பி.ஏ.பி. கால்வாயில் அனுமதியின்றி குழாய்கள் பதிப்பு


பி.ஏ.பி. கால்வாயில் அனுமதியின்றி குழாய்கள் பதிப்பு
x
தினத்தந்தி 26 Sep 2023 8:30 PM GMT (Updated: 26 Sep 2023 8:30 PM GMT)

சுல்தான்பேட்டை அருகே பி.ஏ.பி. கால்வாயில் அனுமதியின்றி பதிக்கப்பட்ட குழாய்களை அகற்ற சென்ற அதிகாரிகளுடன் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோயம்புத்தூர்

சுல்தான்பேட்டை

சுல்தான்பேட்டை அருகே பி.ஏ.பி. கால்வாயில் அனுமதியின்றி பதிக்கப்பட்ட குழாய்களை அகற்ற சென்ற அதிகாரிகளுடன் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கால்வாய்

விவசாயிகள் எதிர்ப்பு

சுல்தான்பேட்டை அருகே மலைப்பாளையம் கிராமத்தில் பி.ஏ.பி. கால்வாயில் இருந்து பிரியும் தாளக்கரை பகிர்வு கால்வாயில் உள்ள பாலத்தை அகற்றி விட்டு, புதிதாக பாலம் அமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் பணிகளை தொடங்கி உள்ளனர். அப்போது அதன் அருகில் விவசாயிகள் சிலர் பாலக்கரை கால்வாயில் இருந்து பிரியும் 2 கால்வாய்களை சேதப்படுத்தி தண்ணீருக்காக சட்ட விரோதமாக குழாய்கள் பதித்ததாக கூறப்படுகிறது.

இதனால் அனுமதியின்றி பதித்த குழாய்களை விவசாயிகளே முன்வந்து அகற்றும் படி வருவாய்த்துறை, நீர்வளத்துறையினர் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால், விவசாயிகள் அகற்றவில்லை. இதையடுத்து நேற்று 2 துறை அதிகாரிகள் இணைந்து குழாய்களை அகற்றுவதற்காக போலீஸ் பாதுகாப்புடன் சென்றனர். அப்போது தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வேலு மந்திராசலம், பி.ஏ.பி. செஞ்சேரிபுத்தூர் நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர் பழனிச்சாமி, சுல்தான்பேட்டை வட்டார அட்மா தலைவர் மந்திராச்சலம் மற்றும் விவசாயிகள் திரண்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.

குழு மூலம் பேச்சுவார்த்தை

இதையடுத்து கருமத்தம்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு தையல்நாயகி, சூலூர் இன்ஸ்பெக்டர் மாதையன், பி.ஏ.பி. அதிகாரி அனந்த பாலதண்டபாணி, சூலூர் தாசில்தார் நித்திலவள்ளி ஆகியோர் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் நீர்வளத்துறை அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவின்படி தான் அனுமதியின்றி பதிக்கப்பட்ட குழாய்களை அகற்ற வந்தோம் என்றனர். அதற்கு விவசாயிகள் காலஅவகாசம் வேண்டும் என்றனர்.

இதை அதிகாரிகள் ஏற்றுக்கொண்டனர். மேலும் அவர்கள் கலெக்டர் தலைமையில் வருவாய்த்துறை, நீர்வளத்துறை அதிகாரிகள், விவசாயிகள் அடங்கிய கூட்டு நடவடிக்கை குழுவினை அமைத்து, குழுவில் தங்களது கோரிக்கைகளை தெரிவிக்க வேண்டும். அனுமதியின்றி பதிக்கப்பட்ட 35 குழாய்களின் உரிமையாளர்கள் யார் என்ற பட்டியலை மாவட்ட கூட்டு கமிட்டியிடம் வழங்க வேண்டும் என்று விவசாயிகளிடம் கூறினர். இதை ஏற்றுக்கொண்ட விவசாயிகள் குழு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு பெறுவதாக கூறி சென்றனர்.


Next Story