பி.ஏ.பி. கால்வாயில் டிராக்டர் கவிழ்ந்து வாலிபர் பலி
சுல்தான்பேட்டை அருகே பி.ஏ.பி. கால்வாயில் டிராக்டர் கவிழ்ந்து வாலிபர் பலியானார்.
சுல்தான்பேட்டை
சுல்தான்பேட்டை அருகே பி.ஏ.பி. கால்வாயில் டிராக்டர் கவிழ்ந்து வாலிபர் பலியானார்.
டிராக்டர் கவிழ்ந்தது
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியை சேர்ந்தவர் செல்வக்குமார்(வயது 20). இவர் நேற்று சுல்தான்பேட்டை பகுதியில் கிடந்த குப்பைகளை டிராக்டரில் சேகரித்து, வடவேடம்பட்டி பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் கொட்ட சென்றார். பின்னர் குப்பைகளை கொட்டிவிட்டு சுல்தான்பேட்டை நோக்கி திரும்பி வந்து கொண்டு இருந்தார். அப்போது டிராக்டர் எதிர்பாராதவிதமாக வடவேடம்பட்டி பி.ஏ.பி. பிரதான கால்வாயில் கவிழ்ந்தது.
பிரேத பரிசோதனை
அப்போது கால்வாயில் தண்ணீர் இல்லை. எனினும் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் செல்வக்குமார் பலத்த காயம் அடைந்தார். சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து சுல்தான்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து, செல்வக்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.