பாபநாசம் அணை நீர்மட்டம் 50 அடியாக குறைந்தது
பாபநாசம் அணை நீர்மட்டம் 50.75 அடியாக குறைந்தது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
விக்கிரமசிங்கபுரம்:
பாபநாசம் அணை நீர்மட்டம் 50.75 அடியாக குறைந்தது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
பாபநாசம் அணை
நெல்லை மாவட்ட மேற்குத்தொடர்ச்சி மலையில் தென் மாவட்டங்களின் பிரதான அணையான பாபநாசம் அணை உள்ளது. 143 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் 142.5 அடி வரை தண்ணீரை தேக்கி ைவத்தது உண்டு.
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களின் குடிநீர் மற்றும் விவசாய தேவைகளை பூர்த்தி செய்யும் முக்கிய நீர் ஆதாரமாக இந்த அணை திகழ்கிறது. மழைக்காலங்களில் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து கடல்போல் காட்சி அளிக்கும். சாரல் மழை பெய்தாலும் கூட அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும்.
50 அடியாக குறைந்தது
பாபநாசம் அணையில் கடந்த 2 மாதங்களுக்கு முன் நீர்மட்டம் 99 அடியாக இருந்தது. அப்போது அணை கடல்போல் காட்சி அளித்தது.
இந்தநிலையில் கடந்த சில நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதி உள்ளிட்ட இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதாலும், போதிய மழை இல்லாத காரணத்தினாலும் அணைக்கு நீர்வரத்து குறைந்து விட்டது. மேலும் நீர்வரத்தை காட்டிலும், நீர் வெளியேற்றம் அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து மளமளவென குறைந்து கொண்டே வருகிறது.
விவசாயிகள் கவலை
இந்த மாத தொடக்கத்தில் 75 அடிக்கு மேல் இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 50.75 அடியாக குறைந்தது. அணைக்கு வினாடிக்கு 222.34 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 1004.75 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
கோடையை சமாளிக்குமா?
ஜூன் மாதம் 3-ந்தேதி அணையில் இருந்து கார் சாகுபடிக்காக தண்ணீர் திறப்பது வழக்கம். இதற்கிடையே குடிநீர் தேவைக்காகவும் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது.
எனவே, வரும் கோடை காலத்தில் குடிநீர் தேவையை சமாளிக்கும் வகையில் அணையில் நீர்மட்டம் இருக்குமா? என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர். பாபநாசம் அணை நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து கொண்டே வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.