குழந்தையை கிணற்றில் வீசி கொன்று தாய் தற்கொலைக்கு முயற்சி


குழந்தையை கிணற்றில் வீசி கொன்று தாய் தற்கொலைக்கு முயற்சி
x
தினத்தந்தி 6 Dec 2022 6:45 PM GMT (Updated: 6 Dec 2022 6:45 PM GMT)

உத்தனப்பள்ளி அருகே குழந்தையை கிணற்றில் வீசி கொன்று விட்டு தாய் தற்கொலைக்கு முயன்றார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கிருஷ்ணகிரி

ராயக்கோட்டை

உத்தனப்பள்ளி அருகே குழந்தையை கிணற்றில் வீசி கொன்று விட்டு தாய் தற்கொலைக்கு முயன்றார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குடும்ப தகராறு

கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகே உள்ள கீரனப்பள்ளியை சேர்ந்தவர் தமிழரசன் (வயது 23). கூலித்தொழிலாளி. இவரது மனைவி சந்தியா (20). இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 1½ வயதில் மதுமிதா என்ற பெண் குழந்தை உள்ளது.

கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்தது. நேற்று முன்தினமும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதன் பின்னர் தமிழரசன் வெளியே சென்று விட்டார். கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனவேதனை அடைந்த சந்தியா தனது குழந்தையை தூக்கி கொண்டு அருகில் உள்ள கிணற்றுக்கு சென்றார்.

தற்கொலை முயற்சி

பின்னர் குழந்தையை கிணற்றில் தூக்கி வீசி விட்டு சந்தியாவும் குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் குழந்தை தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தது. சந்தியாவுக்கு நீச்சல் தெரிந்ததால் தலையில் பலத்த அடிபட்ட காயத்துடன் மேலே ஏறி வந்து சத்தம் போட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அவர்கள் சந்தியாவை மீட்டு ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் கிணற்றில் மூழ்கி இறந்த குழந்தை மதுமிதாவின் உடலை மீட்டு மேலே கொண்டு வந்தனர். இது குறித்து பொதுமக்கள் உத்தனப்பள்ளி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுப்பிரமணியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணை

இது தொடர்பாக உத்தனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். குடும்ப தகராறில் குழந்தையை கிணற்றில் வீசி கொன்று விட்டு தாயும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story