சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டல்


சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டல்
x
திருப்பூர்


பல்லடத்தில் சிறுமியை கூட்டாக சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

சிறுமி பலாத்காரம்

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் கடந்த 5-ந்தேதி பல்லடம் - கொசவம்பாளையம் ரோட்டில் நின்று தனது காதலனுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் அவர்களிடம், இங்கு தனியாக என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று கூறி மிரட்டினர். பின்னர் அவர்கள் இருவரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்வதாக கூறி தாங்கள் வந்த மோட்டார்சைக்கிளில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டனர். நேராக பல்லடத்தை அடுத்த காளிவேலம்பட்டி காட்டுப்பகுதிக்கு அவர்களை கடத்திச்சென்றனர்.

அங்கு காதலனை ஆயுதங்களை காட்டி மிரட்டி தனியாக உட்காரவைத்துவிட்டு, சிறுமியை தனியாக அழைத்துச்சென்று 4 பேரும் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் அதனை தங்களது செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இந்த சம்பவத்தை வெளியே சொன்னால் கொன்று விடுவோம் என்று சிறுமியை மிரட்டியதுடன், அவர்களை பல்லடம் - கோவை சாலையில் கொண்டு வந்து விட்டுவிட்டு தப்பிச் சென்று விட்டனர்.

3 பேர் கைது

இதையடுத்து வீட்டிற்கு சென்ற சிறுமி நடந்த சம்பவம் குறித்து தனது தாயாரிடம் கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் இது பற்றி பல்லடம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் காளிவேலம்பட்டி, செட்டிப்பாளையம் பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினர். அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை பார்வையிட்ட போது, 4 பேர் கொண்ட கும்பல் அந்த சிறுமியை மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது.

அதன் அடிப்படையில் விசாரணை நடத்திய போது, அவர்கள் பல்லடம் அண்ணாநகரைச் சேர்ந்த சேதுராமன் மகன் ரமேஷ் குமார் (வயது 32), அதே பகுதியைச் சேர்ந்த சுந்தர்ராஜ் மகன் ஜான்சன் (26), பல்லடம் அருகே உள்ள ஊஞ்சபாளையத்தைச் சேர்ந்த பாபு என்பவரது மகன் பார்த்திபன் (25) மற்றும் அடையாளம் காணக்கூடிய ஒருவன் என்பது தெரிய வந்தது. இதில் ரமேஷ்குமார், ஜான்சன், பார்த்திபன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்களில் ரமேஷ்குமார், பார்த்திபன் ஆகிய இருவரும் வடமாநில தொழிலாளர்களிடம் வழிப்பறி செய்த வழக்கில் ஏற்கனவே கைதானவர்கள் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை பல்லடம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ஒருவனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சிறுமியை கடத்தி சென்று 4 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story