தண்ணீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலி
உடுமலையை அடுத்த மலையாண்டி கவுண்டனூரைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 29). தொழிலாளி. இவருக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். நேற்று காலை 11 மணியளவில் 2-வது குழந்தை கிஷோர் (3) வீட்டின் அருகே விளையாடிக்கொண்டு இருந்தான். அப்போது வீட்டில் இருந்த தண்ணீர் தொட்டியில் அந்த குழந்தை தவறி விழுந்து விட்டதாக தெரிகிறது. குழந்தையை காணாமல் பதறி துடித்த பெற்றோர், அக்கம் பக்கம் தேடிப்பார்த்தனர். இறுதியாக வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் பார்த்த போது அதில் குழந்தை மூழ்கிய நிலையில் கிடந்தது. உடனே குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில் உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தண்ணீர் தொட்டியில் குழந்தை தவறி விழுந்து இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.