அயனாவரம் போலீஸ் நிலையத்தில் பெண் போலீசுக்கு வளைகாப்பு


அயனாவரம் போலீஸ் நிலையத்தில் பெண் போலீசுக்கு வளைகாப்பு
x

அயனாவரம் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் பெண் போலீசுக்கு இன்ஸ்பெக்டர் முன்னிலையில் சக போலீசார் இணைந்து வளைகாப்பு நடத்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

சென்னை

பெண் போலீஸ்

சென்னை அயனாவரம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக வேலை செய்து வருபவர் சவுமியா. இவருடைய கணவர் சத்தியமூர்த்தி. இவர், தனியார் ஆஸ்பத்திரியில் உதவியாளராக வேலை செய்து வருகிறார்.

சேலத்தை சேர்ந்த இவர்கள், அயனாவரத்தில் தற்காலிகமாக தங்கி உள்ளனர். தற்போது 9 மாத கர்ப்பிணியாக உள்ள பெண் போலீஸ் சவுமியா, சேலத்துக்கு சென்று உறவினர்கள் முன்னிலையில் வளைகாப்பு நடத்த முடியாமல் பரிதவித்தார்.

போலீஸ் நிலையத்தில் வளைகாப்பு

இதை அறிந்த சக போலீசார், சவுமியாவுக்கு சிறப்பாக வளைகாப்பு நடத்த முடிவு செய்தனர். அதன்படி நேற்று மாலை இன்ஸ்பெக்டர் முருகேசன் முன்னிலையில் ஏட்டு பாலமுருகன் ஏற்பாட்டில் அயனாவரம் போலீஸ் நிலையத்தில் கர்ப்பிணியான பெண் போலீஸ் சவுமியாவுக்கு கோலாகலமாக வளைகாப்பு நடத்தப்பட்டது.

7 வகையான உணவுகள், புடவை, வளையல் என அனைத்து வகையான சீர்வரிசைகளுடன் அவருக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது. பின்னர் அப்பகுதியைச் சேர்ந்த ஏழைகள் மற்றும் புகார் கொடுக்க வந்தவர்கள் என 100 பேருக்கு சுவையான விருந்தும் பரிமாறப்பட்டது.

உறவினர்கள் முன்னிலையில் செய்ய முடியாத தனது வளைகாப்பு நிகழ்ச்சியை சகபோலீசார் முன்னின்று செய்ததை கண்டு மனம் மகிழ்ந்த பெண் போலீஸ் சவுமியா, ஆனந்த கண்ணீருடன் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார். போலீஸ் நிலையத்தில் நடந்த இந்த நிகழ்ச்சி அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்தது.


Next Story