அம்மன் கோவில்களில் வளைகாப்பு விழா
உடன்குடி, சாத்தான்குளம் பகுதி அம்மன் கோவில்களில் வளைகாப்பு விழா நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.
உடன்குடி:
உடன்குடி, சாத்தான்குளம் பகுதி அம்மன் கோவில்களில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு வளைகாப்பு விழா கொண்டாடப்பட்டது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.
வளைகாப்பு விழா
உடன்குடி அருகே காரங்காடு சிவசந்தடியம்மன் கோவிலில் ஆடிப்பூர வளைகாப்பு விழாவையொட்டி முக்கிய வீதிகள் வழியாக வளைகாப்பு பொருட்கள் பக்தர்களால் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது. மேலும், குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டி 108திருவிளக்கு மற்றும் கும்ப பூஜை நடந்தது. திருமணமான பெண்களுக்கு குங்குமம், மஞ்சலிட்டு, வளையல்கள் அணிவித்து வளைகாப்பு விழா நடந்தது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான திருமணமான பெண்கள் கலந்து கொண்டனர்.
உடன்குடி சந்தையடியூர் முத்தாரம்மன் கோவிலில் அம்மனுக்கு வளையலால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது .உடன்குடி வடக்கு காலன் குடியிருப்பு, சிவல் விளை புதூர் முத்தாரம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. பிறைகுடியிருப்பு தேவி முத்தாரம்மன் கோவிலில் சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தது.
சாத்தான்குளம்
சாத்தான்குளம் உச்சிமாகாளியம்மன் கோவிலில் ஆடிப்பூர வளைகாப்பு பூஜை நடைபெற்றது. இதை முன்னிட்டு அம்பாளுக்கு பால், தயிர், தேன், இளநீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகங்கள், தீபாராதனை, அம்பாளுக்கு சிறப்பு அலங்கார பூஜை, சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. மேலும், பல்வேறு வகையான வளையல்கள் அம்பாளுக்கு அணிவித்து சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையடுத்து அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதில் பெண்களுக்கு வளையல்கள், பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல் தேவி அழகம்மன் கோவில், பிரம்ம சக்தி அம்மன் கோவில், முத்தாரம்மன் கோவில், மாரியம்மன் கோவில், பெருமாள்சுவாமி கோவில் வளாகத்தில் அமைந்துள்ள மாரியம்மனுக்கும் வளைகாப்பு சிறப்பு பூஜை நடைபெற்றது.
சாத்தான்குளம் அருகே உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் ீசுந்தராட்சி அம்மன் கோவிலில் ஆடிப்பூர சிறப்பு பூஜை நடைபெற்றது. பூஜையையொட்டி காலை 5மணிக்கு ஸ்ரீவைகுண்டம் ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டது. காலை 10மணிக்கு கணபதி ஹோமம், தொடர்ந்து அம்மனுக்கு மஞ்சள், திரவியம், பால், இளநீர், பன்னீர், விபூதி உள்ளிட்ட 108 வகையான அபிஷேகம் நடைபெற்றது. மாலை 3மணிக்கு அம்மனுக்கு வளையல், மஞ்சள், மஞ்சள் கயிறு, உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் வைத்து சிறப்பு பூஜை, புஷ்பாஞ்சலி, லட்சார்ச்சனை நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு பக்தி பாடல்கள் பாடினர்.








