பேட்டரி வாகனத்தில்... மீண்டும் பள்ளிக்கு போகலாம்...!


பேட்டரி வாகனத்தில்... மீண்டும் பள்ளிக்கு போகலாம்...!
x
தினத்தந்தி 4 Nov 2022 12:15 AM IST (Updated: 4 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக பேட்டரி வாகனத்தில் பழங்குடியின மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு மகிழ்ச்சியுடன் சென்று வருகின்றனர்

கோயம்புத்தூர்

ஆனைமலை

'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக பேட்டரி வாகனத்தில் பழங்குடியின மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு மகிழ்ச்சியுடன் சென்று வருகின்றனர்.

பழங்குடியின கிராமம்

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட அடர்ந்த வனப்பகுதியில் 17 பழங்குடியின கிராமங்கள் உள்ளன. இங்கு சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இதில் பழைய சர்க்கார்பதி என்ற கிராமத்தில் 110-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்குள்ள குழந்தைகள் படிப்பதற்கு வசதியாக ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இதில் 80-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இவர்கள் மேல்படிப்புக்காக சேத்துமடை, வேட்டைக்காரன்புதூர் மற்றும் ஆனைமலைக்குதான் வர வேண்டும். ஆனால் 5 கி.மீ. தூரம் கொண்ட சேத்துமடை பகுதிக்கு செல்ல பஸ் வசதி இல்லை. இதனால் இருசக்கர வாகனங்களில் பெற்றோர் உதவியுடன் சென்று வருகின்றனர். எனினும் வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளிட்ட காரணங்களால் பள்ளிக்கு சரிவர செல்ல முடியவில்லை. இதனால் கடந்த எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்ேதர்வை 34 பேர் எழுதவில்லை என்று கூறப்படுகிறது.

பேட்டரி வாகனம்

இதை அறிந்த வனத்துறையினர், தனியார் அமைப்புடன் சேர்ந்து பழங்குடியின மாணவர்கள் பள்ளிக்கு சிரமமின்றி செல்ல பேட்டரி வாகனத்தை ஏற்பாடு செய்தனர். ஆனால் கடந்த 3 மாதமாக பேட்டரி வாகனம் இயக்கப்படாமல், பழைய சர்க்கார்பதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் நிறுத்தப்பட்டு இருந்தது. இதனால் பழங்குடியின மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாமல் வீடுகளிலேயே முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டது.

மகிழ்ச்சி

இதுகுறித்து கடந்த 2-ந் தேதி 'தினத்தந்தி'யில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக வனத்துறை உரிய நடவடிக்கை எடுத்தது. அதன்படி வனத்துறை ஊழியர் ஒருவர் பழங்குடியின மாணவர்களை பேட்டரி வாகனத்தில் பள்ளிக்கு அழைத்து சென்று வர நியமிக்கப்பட்டு உள்ளார். அந்த வாகனத்தில் மீண்டும் பழங்குடியின மாணவர்கள் மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு சென்று வந்தனர். இதுகுறித்து பழங்குடியின மக்கள் கூறும்போது, கடந்த 3 மாதங்களாக பேட்டரி வாகனம் இயக்க ஆளின்றி கிடப்பில் போடப்பட்டது. தற்போது வனத்துறை ஒரு ஊழியரை நியமித்து எங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து சென்று வருவது மகிழ்ச்சியாக உள்ளது. இதற்கு காரணமான வனத்துறைக்கும், 'தினத்தந்தி'க்கும் நன்றி என்றனர்.


Next Story