பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் ரூ 5 கோடி கடன் வழங்க இலக்கு


பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம்  ரூ 5 கோடி கடன் வழங்க இலக்கு
x

பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் ரூ.5 கோடி கடன் வழங்குவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்க கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்

கடலூர்

கடலூர்

ரூ.5 கோடி கடன்

தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாப் செட்கோ), பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தை சேர்ந்தவர்களின் பொருளாதார நிலையை உயர்த்தும் நோக்குடன் மிக குறைந்த வட்டி விகிதத்தில் பல்வேறு திட்டங்களின் கீழ் பொருளாதார கடன்கள் வழங்கி வருகிறது. நடப்பாண்டிற்கு (2021-22) இத்திட்டத்தின் கீழ் ரூ.5 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியாக, விண்ணப்பதாரர் வயது 18 முதல் 60-க்குள் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். நிபந்தனைகளாக, ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடன் வழங்கப்படும். சிறு வணிக கடன் பெறுவதற்கு சுய உதவிக்குழு உருவாக்கப்பட்டு 6 மாதங்கள் நிறைவு செய்திருக்க வேண்டும்.

தனிநபர் கடன்

கடலூர் மாவட்ட மகளிர் திட்ட அலுவலரால் தரப்படுத்துதல் செய்யப்பட்டிருக்க வேண்டும். ரூ.50 ஆயிரத்துக்கு மேல் கடன் கேட்பவராக இருந்தால், வங்கி கோரும் அடமானத்திற்குரிய ஆவணங்களை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். ரூ.1 லட்சத்திற்கு மேற்படும் இனங்களில் திட்ட அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். கடன் தொகையில் 95 சதவீதம் வழங்கப்படும்.

பொது காலக்கடனில், சில்லரை வியாபாரம், சிறுதொழில்கள், விவசாயம், போக்குவரத்து, கைவினைஞர் மற்றும் மரபு வழி சார்ந்த தொழில்கள், இளம் தொழில் பட்டதாரிகள் சுய தொழில், தொழிற்கல்வி பயிலுதல் மற்றும் ஏற்கனவே நடைபெற்று வரும் தொழிலை அபிவிருத்தி செய்வதற்கும் தனிநபருக்கு ரூ.15 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்பட்டு வருகிறது.

வட்டி விகிதம்

நபர் ஒருவருக்கு 6 சதவீத வட்டி விகிதத்தில் ரூ.5 லட்சம் வரையிலும், 7 சதவீத வட்டி விகிதத்தில் ரூ.10 லட்சம் வரையிலும் அதிகபட்சமாக ரூ.15 லட்சம் 8 சதவீத வட்டிவிகிதத்தில் கடன் பெறலாம். கடன் தொகைக்கேற்ப 3 ஆண்டு முதல் 8 ஆண்டுகளுக்குள் கடனை திரும்ப செலுத்த வேண்டும்.

சிறுவணிகக் கடன் திட்டத்தில், ஆண்கள் மற்றும் மகளிர் சுய உதவி குழுக்களின் ஒரு உறுப்பினருக்கு ரூ.1 லட்சம் வீதம் ஒரு குழுவுக்கு அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வீதம் மகளிருக்கு 4 சதவீதம், ஆண்களுக்கு 5 சதவீத வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படும். கடனை திரும்ப செலுத்தும் காலம் 4 ஆண்டுகள் ஆகும்.

கறவை மாடுகள்

புதிய பொற்கால திட்டத்தின் கீழ் மகளிருக்கான அதிகபட்ச கடன் தொகை ரூ.2 லட்சம், 5 சதவீத வட்டி விகிதத்தில் வழங்கப்படும். கடன் தவணை காலம் 3 அல்லது 8 ஆண்டுகள் ஆகும்.

கறவை மாட்டுக்கடன் பெற, மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களில் உறுப்பினர்களாக இருக்கும் பட்சத்தில் நபர் ஒருவருக்கு ரூ.30 ஆயிரம் வீதம் 2 கறவை மாடுகள் வாங்குவதற்கு 6 சதவீத வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படும்.

சிறு, குறு விவசாயிகளுக்கு விவசாயம் சார்ந்த பணிகளுக்கு புதிய ஆழ்துளை கிணறு அமைத்து நீர்ப்பாசன வசதிகள் ஏற்படுத்துவதற்கு கடன் தொகையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் வரை அரசு மானியம் மட்டுமே கடன் உதவி வழங்கப்படும்.

விண்ணப்ப படிவம்

கடன் விண்ணப்ப படிவங்களை www.cuddalore.nic.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பத்துடன், சாதி, வருமான மற்றும் பிறப்பிடச் சான்றிதழ், முன்னணியில் உள்ள நிறுவனம் ஒன்றின் விலைப்புள்ளி, திட்ட அறிக்கை (பெரிய திட்டமாக இருந்தால் மட்டும்), குடும்ப அட்டை, ஆதார் அட்டை, ஓட்டுனர் உரிமம் (போக்குவரத்து வாகனங்களுக்கு கடன் பெறுவதாக இருந்தால் மட்டும்), நிதி உதவி பெறுவதற்கான ஆவணங்கள் அல்லது வங்கி கோரும் அடமானத்திற்குரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் கடன் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து மேற்குறிப்பிட்ட உரிய ஆவண நகல்களுடன் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலகம், கடலூர் அல்லது கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம், கூட்டுறவு பண்டக சாலை வளாகம், வெள்ளிக் கடற்கரை சாலை, கடலூர் என்ற முகவரிக்கு தபால் மூலம் உரிய ஆவணங்களுடன் விண்ணப்ப படிவத்தை அனுப்பி வைக்க வேண்டும்.

மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Next Story