மேட்டூர் காவிரி ஆற்றங்கரை அருகே மீன்கள் செத்து மிதப்பதால் துர்நாற்றம்
மேட்டூர் காவிரி ஆற்றங்கரை அருகே மீன்கள் செத்து மிதப்பதால் துர்நாற்றம் வீசுகிறது.
மேட்டூர்:
மேட்டூர் அணையின் உபரி நீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக திறந்து விடப்படும் தண்ணீர் மேட்டூர் அனல் மின் நிலையம் அருகே உள்ள உபரி நீர் வழிந்தோடும் பாதையை கடந்து சங்கிலி முனியப்பன் கோவில் அருகே மீண்டும் காவிரி ஆற்றுடன் கலக்கிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு இந்த உபரி நீர் வழிந்தோடும் பாதையில் ஏராளமான மீன் குஞ்சுகள் செத்து மிதந்தன. இந்த உபரி நீர் பாதையில் லேசான நீரோட்டம் இருப்பதால் உபரி நீர் வழிந்தோடும் பாதையில் செத்து கிடந்த மீன்கள் அனைத்தும் மேட்டூர் சங்கிலி முனியப்பன் கோவில் அருகே காவிரி ஆற்றங்கரையில் ஒதுங்கி உள்ளது. மீன்கள் செத்து 2 நாட்களுக்கு மேலானதால் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் இருந்து எடப்பாடி செல்லும் சாலையில் உள்ள சங்கிலி முனியப்பன் கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் தண்ணீரும் மாசுபடும் நிலை உள்ளது. இதனால் அந்த பகுதியில் சாலையை கடந்து செல்லும் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் மூக்கை பிடித்துக்கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே செத்து கிடக்கும் மீன்களை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.