ஆடி மாத படையல் பூஜை
ஆடி மாத படையல் பூஜை நடைபெற்றது
சிங்கம்புணரி
சிங்கம்புணரி அருகே எஸ்.வி.மங்கலத்தில் கூந்தல் உடைய அய்யனார் கோவில் உள்ளது. இது பாண்டிய மன்னர் காலத்தில் கட்டப்பட்ட சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவில் ஆகும். தென் மாவட்டங்களில் உள்ள அய்யனார் கோவில்களில் ஆறடி உயரம் கொண்ட ஒரே கல்லால் ஆன அய்யனார் சிலை இந்த கோவிலில் மட்டுமே உள்ளது. இக்கோவிலில் ஆடி மாதத்தையொட்டி சிறப்பு படையல் பூஜை நடைபெற்றது. சிங்கம்புணரி வேளார் வம்சாவளி பங்காளிகள் இணைந்து விழாவை நடத்தினார்கள்.
முன்னதாக ஆறடி உயரம் கொண்ட கூந்தலுடைய அய்யனார் கோவில் மற்றும் நான்கு அடி உயரம் கொண்ட பத்திரகாளி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு 21 வகையான சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமிகளுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அன்னதான விழா நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை சிங்கம்புணரி வேளார் வம்சாவளி பங்காளிகள் செய்திருந்தனர்.