அறுவடைக்கு தயாராகும் நெற்பயிர்கள்
மடத்துக்குளம் வட்டாரத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராகியுள்ள நிலையில், அரசு நெல் கொள்முதல் மையங்களை விரைவில் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
மடத்துக்குளம் வட்டாரத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராகியுள்ள நிலையில், அரசு நெல் கொள்முதல் மையங்களை விரைவில் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
குறுகிய கால ரகங்கள்
மடத்துக்குளம் வட்டாரத்தில் கொழுமம், குமரலிங்கம், மடத்துக்குளம், கணியூர், சோழமாதேவி, கடத்தூர், காரத்தொழுவு உள்ளிட்ட பகுதிகளில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. அமராவதி ஆற்றின் மூலம் பாசன வசதி பெறும் பழைய ஆயக்கட்டு பகுதிகளில் நடப்பு பருவத்தில் 2 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் விளைவிக்கும் நெல்லுக்கு உரிய விலை கிடைக்கும் வகையில் நெல் கொள்முதல் மையங்களை விரைவில் அரசு திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
பாசன நீர் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு தற்போது இந்த பகுதிகளில் ஏடிடி 45, கோ 51, ஏடிடி 37, ஏஎஸ்டி 16, ஏடிடி 43, டிபிஎஸ் 5, ஏடிடி 36 உள்ளிட்ட குறுகிய கால நெல் ரகங்களை பயிரிட்டு வருகிறோம்.
கடந்த காலங்களில் வியாபாரிகளின் ஆதிக்கத்தால் விவசாயிகள் விளைவிக்கும் நெல்லுக்கு போதிய விலை கிடைக்காத நிலை இருந்தது.
இடைத்தரகர்கள்
அதனைக் கருத்தில் கொண்டு அரசு கொள்முதல் மையங்கள் திறக்கப்பட்டு, ஆதார விலை நிர்ணயம் செய்து விவசாயிகளிடமிருந்து அரசு நேரடியாக கொள்முதல் செய்தது. இதனால் ஏராளமான விவசாயிகள் பயனடைந்தனர். நெல் கொள்முதல் மையங்களில் வியாபாரிகள் உள்ளே நுழைந்து முறைகேடுகளில் ஈடுபடுவதைத் தவிர்க்க கடுமையான விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் ஒருசில விவசாயிகளே இடைத்தரகர்களாக மாறி வியாபாரிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட சம்பவங்களும் கடந்த காலங்களில் நடைபெற்றன.
எனவே விவசாயிகள் மட்டும் முழுமையாக பயனடையும் வகையில் கொள்முதல் மையங்களில் கண்காணிப்புப்பணிகள் மேற்கொள்ள வேண்டும். தற்போது மடத்துக்குளம் வட்டாரத்தில் பெரும்பாலான பகுதிகளில் நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக உள்ளன. வரும் வாரங்களில் அறுவடை தீவிரமடையும் வாய்ப்பு உள்ளது. எனவே கொள்முதல் மையங்களை விரைவாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கூறினர்.