அறுவடைக்கு தயாராகும் நெற்பயிர்கள்
கல்லாபுரம் பகுதியில் விளைந்த நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ளன.
கல்லாபுரம் பகுதியில் விளைந்த நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ளன.
குடிநீர் திட்டங்கள்
உடுமலையை அடுத்த மேற்குதொடர்ச்சி மலையில் உற்பத்தியாகின்ற நீராதாரங்களை கொண்டு அமராவதி அணை கட்டப்பட்டு உள்ளது. தமிழகம் மற்றும் கேரள மாநில வனப்பகுதியில் உற்பத்தியாகும் சின்னாறு, தேனாறு, பாம்பாறு மற்றும் துணை ஆறுகள் மழைக்காலங்களில் அணைக்கு நீர்வரத்தை அளிக்கிறது. அதை ஆதாரமாகக் கொண்டு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு அமராவதி ஆறு மூலமாகவும், புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு பிரதான கால்வாய் மூலமாகவும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வரப்படுகிறது. அத்துடன் அமராவதிஆறு மற்றும் பிரதான கால்வாயை அடிப்படையாகக் கொண்டுகுடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள்
இந்த நிலையில் அணைக்கு பருவமழைகள் நல்ல முறையில் கைகொடுத்து உதவியது. இதன் காரணமாக ஏற்பட்ட நீர்வரத்தால் அணையிலும் போதுமான அளவு நீர்இருப்பு இருந்தது. அதைத்தொடர்ந்து முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. அறுவடை முடிந்த பின்பு 2-ம் போக சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.
அதைத்தொடர்ந்து விவசாயிகள் பணிகளில் தீவிரம் காட்டினார்கள். இந்த சூழலில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராகி வருகிறது.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-
இடைத்தரகர்கள் ஆதிக்கம்
பருவமழை காலங்களில் அணைக்கு ஏற்படுகின்றநீர்வரத்தை ஆதாரமாகக்கொண்டு சாகுபடி செய்து வருகிறோம். அவ்வப்போது மழை பெய்து வந்ததால் பருவநிலை மாற்றம் ஏற்படவில்லை. இதனால் பயிர்களும் நோய் தாக்குதலில் இருந்து தப்பித்து நல்ல முறையில் வளர்ந்து அறுவடையை எட்டி உள்ளது. ஆனால் அறுவடைக்கு பின் பராமரிப்பு பணிகளில் ஆண்டுதோறும் தடங்கல்களை சந்தித்து வருகிறோம். குறிப்பாக உலர்கள வசதி இல்லாதது, விவசாயிகளிடம் நேரடியாக நெல் கொள்முதல் செய்யப்படாதது, இடைத்தரகர்கள் ஆதிக்கம் என விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படும் சூழல் உருவாகிறது.
இந்த முறை நெற்பயிர்கள் நல்ல முறையில் வளர்ந்து விளைச்சலை அளிக்கவுள்ளது மன நிறைவை தருகிறது. எனவே துறை சார்ந்த அதிகாரிகள் நெல்மணிகளை உலரவைப்பதற்கு உலர்கள வசதி செய்து தருவதுடன் நெல்மணிகளை நேரடியாக கொள்முதல் செய்து விவசாயிகள் கூடுதல் வருமானம் ஈட்டிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.