பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு
திருச்சி அருகே பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட தலைவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
திருச்சி அருகே பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட தலைவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
பெட்ரோல் குண்டுவீச்சு
திருச்சியை அடுத்த திருவெறும்பூர் அருகே கீழக்கல்கண்டார் கோட்டை பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 46). இவர் உத்தரபிரதேச மாநில முன்னாள் முதல்-மந்திரி மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி திருச்சி தெற்கு மாவட்ட தலைவராக உள்ளார். இவர் மீது கொலை வழக்கு உள்ளது. இவரது மனைவி மாலதி. இவர் கடந்த சட்டமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் திருவெறும்பூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு ரவிச்சந்திரன் வீட்டில் குடும்பத்தோடு தூங்கிகொண்டிருந்தார். அப்போது அதிகாலை 4 மணி அளவில் திடீரென அவரது வீட்டில் மர்ம நபர்கள் சிலர் பெட்ரோல் குண்டுகளை வீசினர். அடுத்தடுத்து 3 பெட்ரோல் குண்டுகளை வீசிய நிலையில், 2 குண்டுகள் வெடித்து சிதறியது. ஒரு குண்டு வெடிக்கவில்லை. பீர்பாட்டிலில் பெட்ரோலை நிரப்பி அதில் திரியிட்டு கொளுத்தி வீசியுள்ளனர்.
போலீசார் விரைந்தனர்
சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்தனர். அப்போது வீட்டின் முன்பகுதி சேதம் அடைந்து இருந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. உடனடியாக இது குறித்து திருவெறும்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு அறிவழகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.
இதையடுத்து தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு, பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடத்தில் தடயங்களை சேகரித்தனர். பின்னர் சம்பவ இடத்துக்கு மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது. மோப்பநாய் சம்பவ இடத்தில் மோப்பம் பிடித்து விட்டு சிறிது தூரம் ஓடி சென்று நின்றுவிட்டது. இதனை தொடர்ந்து ரவிச்சந்திரன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
வாலிபர் கைது
முதற்கட்ட விசாரணையில், அதேபகுதியை சேர்ந்த பழனிசாமி மகன் ராகுல் (22), குணசேகரன் மகன் சச்சின் (24), ராஜசேகர் மகன் ராக்கி என்கிற ராகேஷ் (22), கீழக்கல்கண்டார்கோட்டை அண்ணாநகரை சேர்ந்த முருகானந்தம் மகன் லோகேஷ் (23) ஆகியோர் ரவிச்சந்திரன் வீட்டின் அருகே தினமும் மாலை நேரத்தில் அமர்ந்து பேசி கொண்டும், சிகரெட் பிடித்து கொண்டும் இருந்துள்ளனர்.
இதைக்கண்ட ரவிச்சந்திரன் 4 பேரையும் கண்டித்துள்ளார். இதனால் 4 பேரும் அவர் மீது ஆத்திரத்தில் இருந்துள்ளனர். இதையடுத்து சம்பவத்தன்று அதிகாலை 4 மணி அளவில் அவர்கள் ரவிச்சந்திரன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 4 பேரையும் தேடி வந்தநிலையில், கீழக்கல்கண்டார்கோட்டை அண்ணாநகரை சேர்ந்த லோகேஷை நேற்று முன்தினம் கைது செய்தனர்.
மேலும் 3 பேருக்கு வலைவீச்சு
அவரிடம் விசாரித்தபோது, தங்களை கண்டித்ததால் ரவிச்சந்திரனை பயமுறுத்துவதற்காக அவரது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதாக கூறி உள்ளார். தொடர்ந்து 3 பேறரை தேடி வருகிறார்கள். இவர்கள் 4 பேர் மீதும் அடி்தடி உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. திருச்சி திருவெறும்பூர் அருகே பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட தலைவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.