வருமானவரி அதிகாரிகளை தாக்கிய வழக்கில் ஜாமீன் ரத்து: தி.மு.க. கவுன்சிலர்கள் உள்பட 15 பேர் கோர்ட்டில் ஆஜர்


வருமானவரி அதிகாரிகளை தாக்கிய வழக்கில் ஜாமீன் ரத்து: தி.மு.க. கவுன்சிலர்கள் உள்பட 15 பேர் கோர்ட்டில் ஆஜர்
x

வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கிய வழக்கில் ஜாமீன் ரத்து செய்யப்பட்ட நிலையில் தி.மு.க. கவுன்சிலர்கள் உள்பட 15 பேர் நேற்று கோர்ட்டில் ஆஜராகினர்.

கரூர்,

கரூரில் கடந்த மே மாதம் 26-ந்தேதி ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜியின் தம்பி அசோக்குமார் வீடு உள்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது தி.மு.க.வினர் அசோக்குமார் வீட்டின் முன்பு குவிந்து, அவர்களை சோதனை செய்யவிடாமல் தடுத்தனர். அப்போது அதிகாரிகளுக்கும், தி.மு.க.வினருக்கும் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

கைது

மேலும் வருமானவரித்துறை அதிகாரிகள் வந்த காரை தி.மு.க.வினர் இரும்பு கம்பியால் தாக்கி முன்பக்க கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினர். தொடர்ந்து அவர்களை சோதனை செய்யவிடாமல் அங்கிருந்து வெளியேற்றினர். இந்நிலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் 3 பேர் கொடுத்த புகாரின் பேரில் அடையாளம் தெரியாத 50-க்கும் மேற்பட்டவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் தி.மு.க. கவுன்சிலர்கள் லாரன்ஸ், பூபதி உள்பட 19 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோர்ட்டில் ஆஜர்

இந்நிலையில் கைது செய்யப்பட்ட 19 பேர் ஜாமீன் கேட்டு கரூர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி 19 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து மதுரை ஐகோர்ட்டில் ஜாமீன் உத்தரவை ரத்து செய்யக்கோரி வருமானவரித்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிபதி, வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கிய வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு வழங்கப்பட்ட முன்ஜாமீன், ஜாமீன் ரத்து செய்யப்படுகிறது. சம்பந்தப்பட்ட நபர்கள் 3 நாட்களுக்குள் கரூர் மாவட்ட கோர்ட்டில் சரண் அடைய வேண்டும் என உத்தரவிட்டார்.

இந்நிலையில் கரூர் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் ராஜலிங்கம் முன்னிலையில் தி.மு.க. கவுன்சிலர்கள் லாரன்ஸ், பூபதி உள்பட 15 பேர் நேற்று காலை ஆஜராகினர். இதையடுத்து வழக்கு விசாரணை நடந்தது. இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பை இன்றைக்கு (செவ்வாய்க்கிழமை) ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து 15 பேரும் நீதிமன்ற காவலில் கரூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.


Next Story