வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைதான பெண் உள்பட 2 பேருக்கு ஜாமீன்


வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைதான பெண் உள்பட 2 பேருக்கு ஜாமீன்
x

வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைதான பெண் உள்பட 2 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை அருகே இறையூரில் வேங்கைவயல் பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் அசுத்தம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கலெக்டர் கவிதாராமு மற்றும் போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே, அதிகாரிகள் விசாரணை நடத்த சென்றனர். அப்போது அங்குள்ள அய்யனார் கோவிலில் பட்டியலின மக்கள் வழிபட அனுமதிக்கப்பட்ட போது, சிங்கம்மாள் என்பவர் பட்டியலின மக்களை அவதூறாக பேசியதாக வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வெள்ளனூர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதேபோல் அதே ஊரில் இரட்டை குவளை முறையை கடைப்பிடித்த டீக்கடை உரிமையாளர் மூக்கையாவும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைதானார். இதையடுத்து 2 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

அவர்கள் ஜாமீன் கோரி புதுக்கோட்டையில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்ட கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இதில் அவர்களுக்கு ஜாமீன் வழங்க மற்றொரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் மனுவை டிஸ்மிஸ் செய்து நீதிபதி (பொறுப்பு) சத்யா உத்தரவிட்டார். அதன்பின் ஜாமீன் கோரி மேல்முறையீடு மனுவை அதே கோர்ட்டில் தாக்கல் செய்தனர். இதில் 2 பேருக்கும் ஜாமீன் வழங்கி நேற்று முன்தினம் நீதிபதி சத்யா உத்தரவிட்டார். பொங்கல் பண்டிகையையொட்டி நேற்று முதல் கோர்ட்டுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. விடுமுறை முடிந்த பின் வருகிற 19-ந் தேதி முதல் கோர்ட்டு செயல்பட உள்ளது. ஜாமீன்தாரர்கள் தரப்பில் 2 பேரும் அன்றைய தினம் பிணைய தொகை உள்ளிட்டவை செலுத்திய பின் சிறையில் இருந்து வெளியே வருவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.


Next Story