விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு
மண்டபம் அகதி முகாம் சிறுமி கற்பழிப்பு வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து கோர்ட்டு உத்தரவிட்டது.
ராமநாதபுரம்,
இலங்கை மன்னார் பகுதியை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 44). இவர் கடந்த 1996-ம் ஆண்டு இலங்கையில் இருந்து படகில் குடும்பத்துடன் மண்டபம் வந்து முகாமில் வசித்து வந்தார். இவர் மண்டபம் முகாமில் வசித்து வந்த 13 வயது சிறுமியை கடந்த 2010-ம் ஆண்டு ஆசை வார்த்தை கூறி கற்பழித்து கர்ப்பமாக்கினாராம். இதுதொடர்பாக அப்போதைய மண்டபம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்குபதிவு செய்து நாகராஜனை கைது செய்தார். இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் மாவட்ட மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கின் விசாரணைக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமாருக்கு பலமுறை சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லையாம். சுமார் 10 முறை விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியும் விசாரணை அதிகாரியான சிவக்குமார் ஆஜராகாமல் இருந்து வந்தாராம். இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்ட மகிளா கோர்ட்டில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டர் சிவக்குமாருக்கு நீதிபதி சுபத்ரா பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார். வருகிற 14-ந் தேதி இன்ஸ்பெக்டர் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தற்போது மதுரை நாகமலை புதுக்கோட்டை போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.