போதைப்பொருள் வழக்கில் ஜாமீன் கோரியவர், ரூ.2 லட்சம் அரசு ஆஸ்பத்திரிக்கு செலுத்த நிபந்தனை -ஐகோர்ட்டு உத்தரவு
போதைப்பொருள் பதுக்கிய வழக்கில் கைதானவர், ரூ.2 லட்சத்தை அரசு ஆஸ்பத்திரிக்கு செலுத்த வேண்டும் என்று நிபந்தனை விதித்து மதுரை ஐகோர்ட்டு ஜாமீன் அளித்தது.
மதுரை,
மதுரை மாவட்டம் சமயநல்லூர் போலீசார் கடந்த மாதம் 19-ந்தேதி பரவை கண்மாய்கரை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அந்த வழியாக மொபட்டில் வந்த தெப்பக்குளத்தை சேர்ந்த குணசேகரன் என்பவர் சாக்குமூட்டைகளில் ரூ.4 லட்சம் மதிப்புள்ள குட்கா போதைப்பொருளுடன் சிக்கினார்.
அவரை கைது செய்து விசாரித்ததில், மதுரை வில்லாபுரத்தை சேர்ந்த விஜயகுமார் (53) என்பவரிடம் இருந்து குட்காவை வாங்கி வந்து, பரவை பகுதியில் விற்பதற்காக கொண்டு வந்ததாக தெரிவித்தார். அதை தொடர்ந்து வில்லாபுரத்தில் விஜயகுமாருக்கு சொந்தமான குடோனில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 650 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஜாமீன் மனு
இந்த வழக்கில் குணசேகரன், விஜயகுமார் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் கேட்டு விஜயகுமார் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது கூடுதல் அரசு வக்கீல் டி.செந்தில்குமார் ஆஜராகி, இதேபோன்ற பதுக்கலுக்காக மனுதாரர் மீது ஏற்கனவே ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே அவருக்கு ஜாமீன் அளித்தால் மேலும் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட வாய்ப்புள்ளது. இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதாடினார்.
ரூ.2 லட்சம் செலுத்த உத்தரவு
விசாரணை முடிவில், மனுதாரர் ரூ.2 லட்சத்தை மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரியின் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும். பின்னர் சமயநல்லூர் போலீசில் நாள்தோறும் காலை 10.30 மணி அளவில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். தலைமறைவாகக்கூடாது. இதே போன்ற சம்பவங்களில் ஈடுபடக்கூடாது. சாட்சிகளை கலைக்கக்கூடாது என்பன உள்பட பல்வேறு நிபந்தனைகளை விதித்து, மனுதாரருக்கு ஜாமீன் அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.