பேக்கரி கடை உரிமையாளர் பலி
மோட்டார் சைக்கிள்-டிராக்டர் மோதிய விபத்தில், பேக்கரி கடை உரிமையாளர் பரிதாபமாக இறந்தார்.
வேடசந்தூர் அருகே உள்ள கானப்பாடியை சேர்ந்தவர் முத்துசாமி. அவருடைய மகன் திருப்பதி (வயது 25). இவர், அப்பகுதியில் பேக்கரி கடை நடத்தி வந்தார். நேற்று இவர், தனது உறவினரை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் வத்தலக்குண்டு நோக்கி சென்று கொண்டிருந்தார்.
வத்தலக்குண்டு பைபாஸ் சாலையில், கன்னிமார் கோவில் அருகே மோட்டார் சைக்கிள் வந்தது. அப்போது பெரியகுளத்தில் இருந்து செங்கல் ஏற்றிக்கொண்டு வந்த டிராக்டர், மோட்டார் சைக்கிள் மீது நேருக்குநேர் மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட திருப்பதி படுகாயம் அடைந்தார்.
உயிருக்கு போராடி கொண்டிருந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி திருப்பதி பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக வத்தலக்குண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான டிராக்டர் டிரைவரை வலைவீசி தேடி வருகிறார்.