முஸ்லிம்கள் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம் பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடத்தினர்


முஸ்லிம்கள் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்  பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடத்தினர்
x

கடலூர் மாவட்டத்தில் முஸ்லிம்கள் பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடத்தி, பக்ரீத் பண்டிகை கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர்


கம்மாபுரம்,

முஸ்லிம்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதன்படி கடலூரிலும் பக்ரீத் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி முஸ்லிம்கள் மசூதிகளில் சிறப்பு தொழுகை நடத்தினர்.

விருத்தாசலம் பகுதியில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் பக்ரீத் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் விருத்தாசலம் ஆலடி ரோடு நவாப் ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசலில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தினார்கள். தொழுகைக்கு பின்னர் அனைவரும், ஒருவரை ஒருவர் தழுவி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

நெல்லிக்குப்பத்தில் முஸ்லிம்கள் ஊர்வலமாக நகரின் முக்கிய சாலை வழியாக கொத்பா பள்ளிவாசலுக்கு சென்றனர். அங்கு சிறப்பு தொழுகை நடத்தினர். தொடர்ந்து ஏழைகளுக்கு இறைச்சி, மளிகைப் பொருட்கள் போன்றவற்றை குர்பானியாக வழங்கினர்

லால்பேட்டை

லால்பேட்டையில் நேற்று லால்கான் தோப்பில் உள்ள குத்பா பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதற்கு லால்பேட்டை அரபுக் கல்லூரி முதல்வரும், கடலூர் மாவட்ட தலைமை காஜியுமான நூருல் அமீன்ஹஜ்ரத் தலைமை தாங்கி சிறப்பு சொற்பொழிவு செய்தார். தொர்ந்து சிறப்பு தொழுகை நடைபெற்றது.

இதில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட முஸ்லிம்கள் பங்கேற்றனர். அதை தொடர்ந்து ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி பக்ரீத் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.

மேலும் ஏழை எளிய மக்களுக்கு குர்பானி வழங்கினர். அதேபோல் எள்ளேரி, கொள்ளுமேடு, கந்தகுமரன், நத்தமலை, திருச்சின்னபுரம், ரம்ஜான் தைக்கால், காட்டுமன்னார்கோவில், ஆயங்குடி, நெடுஞ்சேரி உள்படமுஸ்லிம்கள் வசிக்கும் பல்வேறு பகுதிகளில்பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை நடந்தது.

பண்ருட்டி

பண்ருட்டியில் கடலூர் மெயின் ரோட்டில் உள்ள ஈத்கா மைதானத்தில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடைபெற்றது. முன்னதாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக ஈத்கா மைதானத்திற்கு வந்தடைந்தனர். பின்னர் அங்கு சிறப்பு தொழுகை நடைபெற்றது.

இதில், பண்ருட்டி அரசினர் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவரும், ஜேப்பியார் ஸ்டில்ஸ் நிறுவன அதிபர் ஜாகீர் உசேன், பண்ருட்டி நூர் முகமது ஷா அவுலியா தர்கா தலைவர் அன்சர் பாஷா, வழக்கறிஞர் இதயத்துல்லா, தர்கா கமிட்டி நிர்வாகிகள் சித்திக் பாஷா, ஜாகீர் உசேன், முகமது காசிம், நகர மன்ற உறுப்பினர் முகமது ஹனிபா, யாசின், மொய்தீன் ஜாமத்து தலைவர் அப்துல் கலாம் உள்ளிட்ட ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பரங்கிப்பேட்டை

பரங்கிப்பேட்டையில் முஸ்லிம்கள் வாத்தியப்பள்ளி திடலில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். இந்த தொழுகை காலை 8 மணிக்கு தொடங்கி 8.30 மணிக்கு நிறைவடைந்தது. இதேபோல் முட்கார், புவனகிரி, கோவிலம்பூண்டி, கிள்ளை போன்ற பகுதிகளிலும் சிறப்பு தொழுகை நடந்தது.

இதேபோன்று திட்டக்குடி, சிதம்பரம், குறிஞ்சிப்பாடி, நெய்வேலி என்று மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது.


Next Story