கோவையில் பக்ரீத் சிறப்பு தொழுகை


கோவையில் பக்ரீத் சிறப்பு தொழுகை
x
தினத்தந்தி 30 Jun 2023 5:30 AM IST (Updated: 30 Jun 2023 5:31 AM IST)
t-max-icont-min-icon

பக்ரீத் பண்டிகையையொட்டி கோவையில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

கோயம்புத்தூர்

கோவை,

பக்ரீத் பண்டிகையையொட்டி கோவையில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

பக்ரீத் பண்டிகை

இறைவனின் தூதரான இப்ராகிமின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் முஸ்லிம்கள் பக்ரீத் பண்டிகையை கொண்டாடி வருகிறார்கள். அதன்படி நேற்று முஸ்லிம்கள் பக்ரீத் பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடினார்கள்.

இதையொட்டி கோவையில் பல்வேறு இடங்களில் உள்ள மசூதிகள், திறந்தவெளி மைதானங்களில் தொழுகை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஒவ்வொரு இடத்திலும் நடந்த தொழுகையில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.

சிறப்பு தொழுகை

நாட்டில் அமைதி நிலவ வேண்டும், அனைவரும் அமைதியோடு வாழ வேண்டும் என்று முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையின்போது வேண்டிக்கொண்டனர். இந்த தொழுகை முடிந்ததும் ஒருவருக்கு ஒருவர் கட்டிப்பிடித்து வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். இந்த தொழுகையின்போது முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து பங்கேற்றனர்.

பின்னர் அவர்கள் இப்ராகிமின் தியாகத்தை நினைவுகூறும் வகையில் வீடுகளில் ஆடு, மாடு ஆகியவற்றை பலியிட்டு அவற்றை 3 பங்காக பிரித்தனர். அதில் ஒரு பங்கை நண்பர்களுக்கும், மற்றொரு பங்கை ஏழைகளுக்கும், 3-வது பங்கை தங்களுக்கும் எடுத்துக்கொண்டனர். சில இடங்களில் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.

313 பள்ளிவாசல்கள்

கோவை ராம் நகர் பள்ளிவாசலில் தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் சி.டி.சி. ஜப்பார் தலைமையில் சிறப்பு தொழுகை நடந்தது. கவுண்டம்பாளையம் நூர் மஸ்ஜித் பள்ளி வாசலில் நடந்த தொழுகையில் கோவை மாவட்ட அனைத்து ஜமாஅத் பொதுச்செயலாளர் முகமது அலி, ஜமாத் தலைவர் சுக்ருல்லா பாபு, செயலாளர் தாஜ் முகமது உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கோவை பூ மார்க்கெட் ஹைதர் அலி திப்பு சுல்தான் சுன்னத் ஜமாத் பள்ளிவாசலில், கரும்புக்கடை சுன்னத் ஜமாத்தில் லத்தீப், குனியமுத்தூர் பள்ளிவாசலில் மாலிக் ஹிஜிரத், போத்தனூர் பள்ளிவாசலில் அமீர் அலி, செல்வபுரத்தில் இப்ராகிம், பூ மார்க்கெட் ஹைதர் அலி திப்பு சுல்தான் ஜமாத் பள்ளிவாசலில் சவுகத் அலி, ஆர்.எஸ்.புரத்தில் கிர் முகமதுரத்தனபுரியில் காஜா மொய்தீன், பீளமேட்டில் அப்துல் ஹக் ஆகியோர் தலைமையில் தொழுகை நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் 40 மைதானங்கள், 313 பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடந்தது.


Next Story