முழுமை பெறாத மேம்பால பணிகள்

திருப்பூரில் முழுமை பெறாத மேம்பால பணிகளை முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
போக்குவரத்து நெரிசல்
திருப்பூர் நகருக்குள் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண, தாராபுரம் ரோடு, மங்கலம் ரோடு, அவினாசி ரோடு, பி.என். ரோடு, காங்கயம் ரோடு, ஊத்துக்குளி ரோடுகளை இணைக்கும் வகையில் 48 கி.மீ. தூரத்திற்கு ரிங் ரோடு அமைக்கும் பணி நடந்தது.
இந்த ரிங் ரோட்டில் மங்கலம் ரோடு, காலேஜ் ரோடுகளை இணைக்கும் வகையில் அணைப்பாளையம் பகுதியில் நொய்யல் ஆற்றின் குறுக்கே உயர் மட்ட பாலம், தண்டவளத்தின் குறுக்கே ரெயில்வே மேம்பாலம் கட்டப்பட்டது.
எனினும், கோர்ட்டில் வழக்கு, நிலம் எடுப்பதில் சிக்கல் உள்ளிட்ட உள்ளிட்ட காரணங்களால் இந்த பணி இழுபறியானது. பல்வேறு நிலைகளுக்கு பிறகு நொய்யல் ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் பணி முடிந்தது. ஆனாலும் பணி முழுமைப்படுத்தப்படாமல் உள்ளது.
இந்த பாலத்தின் வழியாக வாகனங்கள் இயக்க அனுமதித்த போதும் வாகனங்கள் பாலத்தின் மேல் ஏறுவதற்கு சரியான பாதை வசதிகள் இல்லாததால் தட்டு தடுமாறி வாகனங்களை இயக்கி செல்கின்றனர். பாலத்தின் ஆரம்ப பகுதியில் ஜல்லி கற்களும், குழிகளும் அதிக அளவில் காணப்படுவதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடனே செல்கின்றனர்.
முழுமைபடுத்தவேண்டும்
மேலும் அவ்வழியாக இரவு நேரங்களில் பயணிகள் பாலத்தைக் கடக்க முடியாமல் விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. பல லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டு வரும் பாலத்தின் பணி பாதியில் நிற்பது, முழுமை படுத்தாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதும் மக்களிடையே வேதனையை ஏற்படுத்தி உள்ளது. பாலத்தின் பணிகளை முடித்திடவும், ரெயில்வே மேம்பாலம் பணிகளை தொடங்கி பணிகளை முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றும் அப்பகுதி சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.