பாலமுருகன் கோவில் கும்பாபிஷேகம்


பாலமுருகன் கோவில் கும்பாபிஷேகம்
x

பாலமுருகன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

பெரம்பலூர்

கும்பாபிஷேகம்

பெரம்பலூர் நகரில், எளம்பலூர் சாலையில் உள்ள பாலமுருகன் கோவிலில் பாலமுருகன் மூலவர், ராஜகணபதி மற்றும் தட்சிணாமூர்த்தி, விஷ்ணு துர்க்கை அம்மன், நவக்கிரகங்கள் ஆகிய பரிவார தெய்வங்களுக்கு திருப்பணிகள் நிறைவு பெற்று, நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. இதை முன்னிட்டு கடந்த 5-ந்தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கி லட்சுமி, சுதர்சன ஹோமங்கள், கோபூஜை, வாஸ்துபூஜை, நேற்று முன்தினம் இரவு வரை 3 கால யாக சாலை பூஜைகளும், நேற்று காலை 4-வது கால யாக சாலை பூஜைகளும் நடந்தன. வேள்வி பூஜைகளை நாரணமங்கலம் சுத்தரெத்தின சிவாச்சாரியார் மற்றும் கோவில் அர்ச்சகர் ஜெ.ரமேஷ்அய்யர் உள்ளிட்ட சிவாச்சாரியார் குழுவினர் நடத்தினர்.

இதைத்தொடர்ந்து நேற்று காலை யாகசாலையில் இருந்து புனித நீருடன் கடங்கள் புறப்பாடு நடைபெற்று, கோபுர விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் மூலவர் சன்னதியின் கோபுர கலசத்திலும், பரிவார தெய்வங்கள் சன்னதியின் கோபுர கலசத்திலும் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. முன்னதாக கருடன் வானில் வட்டமிட்டது. இதனை கண்ட பக்தர்கள் அரோகரா... அரோகரா... ஓம்முருகா... என்ற கோஷங்களை எழுப்பினர்.

பக்தர்கள் தரிசனம்

கும்பாபிஷேகத்தை தொடர்ந்து மகா தீபாராதனை, பிரசாத வினியோகம் நடந்தது. நிகழ்ச்சியில் விழாக்குழுவை சேர்ந்த நாகரத்தினம், விஜயகுமார், காமராஜ், மளிகைபாலு, கற்பகவிலாஸ் ராஜேந்திரன், டிரைவிங் பயிற்சி உரிமையாளர் பழனிஅர்ஜூனன், மின்பணியாளர் எளம்பலூர் ரமேஷ், கோவில் உதவி அர்ச்சகர் கார்த்திகேயன் உள்பட மேட்டுத்தெரு, ராமுபிள்ளை காலனி, பாரதிதாசன் நகர், முத்துநகர், கம்பன்நகர், ரோவர் நகர், காவேரி நகர், மேரிபுரம், மதனகோபாலபுரம் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கோபுர தரிசனமும், சாமி தரிசனமும் செய்தனர்.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கர்ணம் சுப்ரமணியம் சகுந்தலா திருமண மண்டபத்தில் காலை முதல் மதியம் வரை அன்னதானம் நடந்தது. இதில் நளபாகம் முத்துவீரன்-காசிவிஸ்வநாதன் தலைமையில், சமையல் கலைஞர்கள் ஜெகதீசன், முருகேசன் மற்றும் முருகனடியார்கள், தன்னார்வக்குழு மூலம் சுமார் 8 ஆயிரம் பேருக்கு அன்னதானம் அளிக்கப்பட்டது. கும்பாபிஷேக விழா மற்றும் அன்னதானத்திற்கான ஏற்பாடுகளை பாலமுருகன் கோவில் திருப்பணி குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர். இரவில் மேளதாளம், வாண வேடிக்கைகள் முழங்க சப்பரத்தில் சாமி வீதி உலா நடைபெற்றது.

1 More update

Next Story