பாலையூர் அருள் சக்தி மாரியம்மன் கோவில் தேரோட்டம்
பாலையூர் அருள் சக்தி மாரியம்மன் கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
சிறப்பு பூஜைகள்
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள பாலையூரில் அருள் சக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் தேர்திருவிழா கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கி, 13 நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாள் இரவும் பல்வேறு வாகனத்தில் விநாயகர், மாரியம்மன் சுவாமிகள் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு கரகாட்டம் மற்றும் வாணவேடிக்கையுடன் சுவாமி திருவீதி உலா ஊரின் முக்கிய வீதிகளின் வழியாக வந்தது. நேற்று முன்தினம் பால்குடம் எடுத்தல், அலகு குத்துதல், அக்னி சட்டி எடுத்தல், அங்க பிரதட்சணம் செய்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சியும், பொங்கல், மாவிளக்கு பூஜையும் நடைபெற்றது.
தேரோட்டம்
நேற்று விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. அப்போது மங்கள இசையுடன் தேருக்கு மாரியம்மன் சுவாமி எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் இருந்து புறப்பட்ட தேர், ஊரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று பின்னர் கோவிலை சென்றடைந்தது.
இதில் பாலையூர் மற்றும் பல்வேறு ஊர்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதையடுத்து இன்று (செவ்வாய்க்கிழமை) மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடைகிறது.