பொக்கிச காளியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்
குத்தாலம் அருகே பொக்கிச காளியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்
குத்தாலம்:
குத்தாலம் அருகே வழுவூர் திருநாள்கொண்டச்சேரியில் பொக்கிச காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் 3-ம் ஆண்டு கரகம், காவடி, பால்குட திருவிழா கடந்த 1-ந் தேதி கரகம் புறப்பாடு செய்யப்பட்டு காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று விழாவின் முக்கிய நிகழ்வான கரகம், காவடி, பால் குடத்திருவிழா நடந்தது. முன்னதாக கங்கணம் கட்டிக்கொண்டு விரதம் இருந்த பக்தர்கள் வீரன் கோவிலில் இருந்து கரகம், காவடி, பால்குடம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக மேள வாத்தியங்கள் முழங்க வாணவேடிக்கையுடன் கோவிலை வந்தடைந்தனர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை வழுவூர் திருநாள்கொண்டசேரி கோவில் நிர்வாகிகள், கிராம மக்கள் செய்திருந்தனர். அதனை தொடர்ந்து சந்தனகாப்பு அலங்காரம் நடைபெற்றது.