படைபத்து மாரியம்மன் கோவிலில் நாளை பால்குட ஊர்வலம்

அரியலூரில் உள்ள படைபத்து மாரியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
அரியலூர் மேலத்தெருவில் பிரசித்தி பெற்ற படைபத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையன்று பக்தர்கள் பால்குடம் எடுத்து அம்மன் திருவீதியுலா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 17-ந் தேதி முகூர்த்தக்கால் நடப்பட்டது. இதையொட்டி நாளை (வெள்ளிக்கிழமை) காலை படைபத்து மாரியம்மன் கோவிலில் இருந்து பக்தர்கள் புறப்பட்டு பஸ் நிலையம் அருகே உள்ள செட்டி ஏரிக்கரையில் இருக்கும் விநாயகர் கோவிலை அடைவார்கள். அங்கு பக்தர்கள் மஞ்சள் ஆடை அணிந்து, அலகுகள் குத்தி, பால்குடம் எடுத்து ஊர்வலமாக புறப்பட்டு மார்க்கெட் தெரு, தேரடி, எம்.பி.கோவில் தெரு, வெள்ளாளர் தெரு, ராமலிங்கம் தெரு, முருகன் கோவில் வழியாக படைபத்து மாரியம்மன் கோவிலை அடைவார்கள். அதன்பின்னர் மாரியம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்படும். பின்னர் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். இரவு வண்ண விளக்குகள், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் படைபத்து மாரியம்மன் வீதியுலா நடைபெறும். நாளைமறுநாள் (சனிக்கிழமை) மாலை கோவில் வளாகத்தில் ஊரணி பொங்கல் வைத்து வழிபாடு செய்யப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று ஊஞ்சல் மற்றும் ரத உற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்த பால்குட விழாவுக்கான ஏற்பாடுகளை மேலத்தெரு விழா கமிட்டியினர் மற்றும் பொதுமக்கள், படைபத்து மக்கள் நலக்குழுவினர் செய்து வருகின்றனர்.






