சார்பதிவாளர் அலுவலகத்தில் அதிகாரி ஆய்வு
பல்லடம் சார்பதிவாளர் அலுவலகத்தில் முறைகேடுகள் நடப்பதாகவும் இது குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாளை (திங்கட்கிழமை) முதல் 17-ந் தேதி வரை வேலை நிறுத்தம் செய்யப்போவதாக பல்லடம் பத்திர எழுத்தர்கள் அறிவித்திருந்தனர். இந்த நிலையில் நேற்று பல்லடம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு கோவை மண்டல துணை பதிவுத்துறை தலைவர் சுவாமிநாதன் வந்து பத்திர எழுத்தர்கள், பொதுமக்கள், சார்பதிவாளர்கள் ஆகியோரிடம் நேரில் விசாரணை நடத்தினார்.
அனைவரின் கருத்துக்களை கேட்ட பின் கோவை மண்டல பதிவுத்துறை துணைத் தலைவர் கூறும்போது " பத்திரப்பதிவில் உள்ள நடைமுறைகளைப் பின்பற்றி பத்திரப்பதிவு செய்யப்படுகிறது. கோவில் நிலம், மூலப் பத்திரம் இல்லாத பத்திரங்களை பதிவு செய்ய இயலாது. கோவில் நிலம் என்று குறிப்பிட்டு இருந்தால், இந்து அறநிலையத்துறை இடம் தடையின்மை சான்று பெற்றுக் கொடுத்தால் அது பதிவு செய்யப்படும். புகார்களுக்கு ஆதாரம் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதையடுத்து வரும் 24-ந் மீண்டும் விசாரணை நடத்தப்படும் என்றும் அன்று ஆதாரங்களை சமர்ப்பிக்கலாம் என கூறியதை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.