மூங்கில்துறைப்பட்டு பகுதியில் மானை வேட்டையாடும் கும்பல்


மூங்கில்துறைப்பட்டு பகுதியில்   மானை வேட்டையாடும் கும்பல்
x

மூங்கில்துறைப்பட்டு பகுதியில் மானை வேட்டையாடும் கும்பல் வனத்துறை நடவடிக்கை எடுக்குமா

கள்ளக்குறிச்சி

மூங்கில்துறைப்பட்டு

கல்வராயன்மலை அடிவாரப் பகுதிகளில் நூற்றுக்கணக்கான கிராமங்கள் உள்ளன. பெரும்பாலும் மலை மற்றும் காப்புக்காடுகள் உள்ளடங்கிய இங்கு தைல மரங்கள் மற்றும் கருவேல, சீமை கருவேல மரங்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. மேலும் தமிழக அரசுக்கு சொந்தமான காப்பு காடுகள் மற்றும் மலைப் பகுதிகளும் இங்கு உள்ளன. வானுயர வளா்ந்து நிற்கும் மரங்களுடன் பச்சைப் பட்டு விரித்தாற்போன்று இயற்கை எழில் மிகுந்து காணப்படும் இப்பகுதியில் மான், கரடி, முயல், காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் மட்டுமல்லாமல் பல்வேறு வகையான பறவைகளும் அதிக அளவில் வசித்து வருகின்றன.

குறிப்பாக வடபொன்பரப்பி காப்புக்காடு, கடுவனூர், பாக்கம் காப்புக் காடுகள் பவுஞ்சிப்பட்டு மலைப்பகுதிகளில் வன விலங்குகள் அதிகளவில் வசித்து வருகின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு ஆயிரக்கணக்கான மான்கள் இங்கு வசித்து வந்த நிலையில் தற்போது விரல் விட்டு எண்ணும் வகையிலேயே மான்கள் காணப்படுகின்றன. இதற்கு காரணம் இங்கு மர்ம நபர்கள் தொடர்ந்து மான்களை வேட்டையாடி வருவதுதான். இறைச்சிக்காக மட்டுமின்றி மான்களின் தோல் மற்றும் கொம்புக்காகவும் அவற்றை வேட்டையாடி வெளியூர்களுக்கு கடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து அப்பகுதியை சேர்ந்த விலங்கின ஆர்வலர்கள் கூறும்போது, இங்குள்ள மலை மற்றும் காடுகளில் இரவு நேரங்களில் அவ்வப்போது துப்பாக்கி சுடும் சத்தத்தை கேட்க முடிகிறது. இதனால் மர்ம நபர்கள் வன விலங்குகள் மற்றும் பறவைகளை வேட்டையாடி வருவது தெரிகிறது. பெரும்பாக்கம் ஏரி பகுதி மற்றும் வடபொன்பரப்பி காப்பு காடுகளில் மான் வேட்டை அதிக அளவில் நடைபெறுகிறது. இங்கு நூற்றுக்கணக்கான மான்கள் இருந்த நிலையில் தற்போது ஒற்றை இலக்க எண்ணிக்கையிலேயே அவை உள்ளன. வேட்டையாட வருபவர்களை தட்டிக் கேட்டால் அவர்கள் கேட்பவர்களை தாக்கிவிட்டு தப்பி சென்று விடுகிறாா்கள். இதற்கு பயந்து அவர்களை யாரும் கண்டுகொள்வது கிடையாது. சரி நம்மால்தான் தடுக்க முடியவில்லை என்று வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தால் அவர்களும் கண்டுகொள்வதில்லை. இதனால் வேட்டையாளர்கள் எந்தவித அச்சமும் இன்றி விலங்கு, பறவைகளை சர்வசாதாரணமாக வேட்டையாடி வருகிறார்கள். இந்த நிலை தொடர்ந்தால் காடு, மலைகளில் விலங்கு, பறவைகளை காண்பது அரிதாகி விடும். எனவே சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு காடு, மலைகளில் விலங்கு, பறவைகளை வேட்டையாட வருபவர்களை தீவிரமாக கண்காணித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story