செயற்கை தேன் உற்பத்திக்கு தடைவிதிக்க வேண்டும் - தேனீ வளர்ப்பு விவசாயிகள் கோரிக்கை

செயற்கை தேன் உற்பத்தி செய்வதை தடை செய்ய வேண்டும் என்று தேனீ வளர்ப்பு விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
அருமனை,
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் தேனீ வளர்ப்போர் விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மார்த்தாண்டத்தில் நடந்தது. கூட்டத்திற்கு ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஆமோஸ் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் சாத்ராக் முன்னிலை வைத்தார். தேனீ வளர்ப்போர் கூட்டுறவு சங்க நிர்வாக குழு துணை தலைவர் வெனிஸ் வரவேற்றார்.
கூட்டத்தில் மார்த்தாண்டம் தேனீ வளர்ப்போர் கூட்டுறவு சங்க நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான தேனீ வளர்ப்பு விவசாயிகள் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து தேனீ வளர்ப்பு விவசாயிகள் கூறுகையில்,
குமரி மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் இயற்கை தேன் உற்பத்தி செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் தேனீ குடும்பங்களை பாதுகாத்து அதில் இருந்து இயற்கை தேனை சேமிக்கின்றனர். பல்வேறு விதமான தாவரங்களின் பூக்களிலிருந்து தேனீக்கள் மூலம் இயற்கை தேனை சேமிக்கின்றனர்.
இந்த தேன் பல்வேறு விதமான நோய்களுக்கு அருமருந்தாக பயன்படுகிறது. எனவே அரசு இயற்கை தேன் உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டும். மார்த்தாண்டம் கூட்டுறவு சங்கத்தில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான டன் சேமிக்கப்படுகின்றது.
இந்த தேன் விற்பனை செய்ய அரசு உதவ வேண்டும். இயற்கை தேன் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு பாதுகாப்பும் இயற்கை தேன் உற்பத்திக்கு ஆதரவும் வழங்குவதோடு சேர்க்கை தேன் உற்பத்தி செய்வதை தடை செய்ய வேண்டும் என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.