கேரளாவில் இருந்து நீலகிரிக்கு கறிக்கோழிகள் கொண்டு வர தடை


கேரளாவில் இருந்து நீலகிரிக்கு கறிக்கோழிகள் கொண்டு வர தடை
x
தினத்தந்தி 17 Dec 2022 12:15 AM IST (Updated: 17 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

பறவை காய்ச்சல் பரவல் எதிரொலியாக கேரளாவில் இருந்து நீலகிரிக்கு கறிக்கோழிகள் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கும் பணி மும்முரமாக நடைபெறுகிறது.

நீலகிரி

கூடலூர்

பறவை காய்ச்சல் பரவல் எதிரொலியாக கேரளாவில் இருந்து நீலகிரிக்கு கறிக்கோழிகள் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கும் பணி மும்முரமாக நடைபெறுகிறது.

பறவை காய்ச்சல்

கேரள மாநிலம் கோட்டயம், ஆலப்புழா உள்ளிட்ட மாவட்டங்களில் பறவை காய்ச்சல் பரவி வருகிறது. இதையொட்டி அரசு உத்தரவின் பேரில் கோட்டயம், ஆலப்புழா மாவட்டங்களில் உள்ள கோழி, வாத்து பண்ணைகளில் சுகாதாரம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறையினர் ஆய்வு நடத்தினர். தொடர்ந்து சுமார் 8 ஆயிரம் கோழி, வாத்துகளை அழித்தனர்.

இதற்கிடையில் பறவை காய்ச்சல் பரவாமல் தடுக்க பல்வேறு மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பண்ணைகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

கிருமி நாசினி

இந்த நிலையில் கோட்டயம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா வாகனங்கள், சரக்கு லாரிகள் கூடலூர் வழியாக கர்நாடகா மற்றும் ஊட்டிக்கு இயக்கப்படுகிறது. இதனால் நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் பறவை காய்ச்சல் பரவாமல் தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மாநில எல்லைகள் வழியாக வரும் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கும் பணி நேற்று தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

கூடலூர் பகுதியில் உள்ள நாடுகாணி, பாட்டவயல், சோலாடி, நம்பியார்குன்னு உள்பட அனைத்து சோதனைச்சாவடிகளிலும் கால்நடை பராமரிப்புத் துறையினர் முகாமிட்டு கேரளாவில் இருந்து வரும் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளித்து வருகின்றனர்.

தடை

இது தவிர வயநாடு பகுதியில் இருந்து எருமாடு உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களுக்கு கறிக்கோழிகள் கொண்டு வரவும் தடை விதித்துள்ளனர். மேலும் 'லவ் பேர்ட்ஸ்' உள்ளிட்ட பறவை இனங்களையும் எடுத்து வரக்கூடாது என அறிவுறுத்தி உள்ளனர். உத்தரவை மீறினால் சம்பந்தப்பட்ட வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர். இதேபோல் கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் உள்ள பண்ணைகளிலும் கால்நடை பராமரிப்பு துறையினர் ஆய்வு நடத்தினர்.


Related Tags :
Next Story