6¾ டன் விதைகள் விற்பனைக்கு தடை


6¾ டன் விதைகள் விற்பனைக்கு தடை
x

நாமக்கல் மாவட்டத்தில் தரமற்ற நிலையில் இருந்த 6¾ டன் எடையுள்ள விதைகள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டு இருப்பதாக சேலம் விதை ஆய்வு துணை இயக்குனர் தெரிவித்து உள்ளார்.

நாமக்கல்

அதிகாரிகள் ஆய்வு

சென்னை விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று இயக்குனரின் உத்தரவுப்படி தரமான விதைகள், நியாயமான விலையில் விவசாயிகளுக்கு வழங்குவதை உறுதி செய்யும் வகையில் நாமக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்களில் சேலம் விதை ஆய்வு துணை இயக்குனர் செல்வமணி மற்றும் நாமக்கல் விதை ஆய்வாளர்கள் திடீர் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த ஆய்வின் போது விதைகள் இருப்பு பதிவேடு, பகுப்பாய்வு சான்று, பதிவுச்சான்று, கொள்முதல் பட்டியல்கள், விற்பனை பட்டியல்கள் ஆகியவற்றை சரிபார்த்தனர். மேலும் விதை மூட்டைகள் மரக்கட்டைகளின் மீது முறையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கிறதா? எனவும், உரம் மற்றும் பூச்சி மருத்துகளில் இருந்து தனியாக பிரித்து, பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருக்கிறதா? எனவும் ஆய்வு செய்தனர்.

விதை விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்படும் விதைகளின் முளைப்புத்திறனை உறுதி செய்யும் வகையில், நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு விதை ஆய்வாளர்களால் நாமக்கல் மாவட்டத்தில் 707 விதை மாதிரிகள் எடுத்து, பகுப்பாய்விற்காக நாமக்கல் மற்றும் கோவை அரசு விதை பரிசோதனை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

விற்பனைக்கு தடை

விதிமீறல்கள் கண்டறியப்பட்ட விதை விற்பனை நிலையங்களில், ரூ.23 லட்சத்து 692 மதிப்புள்ள 6¾ மெட்ரிக் டன் விதைகளை விற்பனை செய்ய தடை விதித்து, சேலம் விதை ஆய்வு துணை இயக்குனர் செல்வமணி உத்தரவிட்டுள்ளார். மேலும் தரமான விதைகளை, விதை விற்பனை உரிமம் பெற்ற விதை விற்பனை நிலையங்களில் இருந்து மட்டுமே, விற்பனை பட்டியலுடன் வாங்கி விவசாயிகள் பயன்பெற வேண்டும் என்று துணை இயக்குனர் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.


Next Story