கொல்லிமலையில் மலையேறும் பயிற்சிக்கு தடை
வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், காட்டுத்தீ பரவும் அபாயம் இருப்பதால் வருகிற மே மாதம் வரை 3 மாதத்துக்கு கொல்லிமலையில் மலையேற்ற பயிற்சிக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
கொல்லிமலை
தமிழகத்தில் வனப்பகுதிகளான ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, மேட்டூர், தேனி, கொல்லிமலை உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் மலையேற்ற பயிற்சிக்கான பாதைகள் உள்ளன.
அதற்கென தனி குழுக்களும் செயல்படுகின்றன. மலையேறும் பயிற்சிக்காக அந்தந்த பகுதி மாவட்ட வன அலுவலர், வனச்சரகர் ஆகியோரிடம் அனுமதி பெற்று மலையேற்ற பயிற்சியில் ஈடுபட வேண்டும்.
இந்தநிலையில் கடந்த 2018-ம் ஆண்டு தேனி மாவட்டம் குரங்கனியில் மலையேறும் பயிற்சியில் ஈடுபட்ட இளைஞர்கள் காட்டுத்தீயில் சிக்கினர். இச்சம்பவத்தை தொடர்ந்து, கோடைக்காலங்களில் மலையேற்ற பயிற்சிக்கு வனத்துறை அனுமதி அளிப்பதில்லை.
தற்போது கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெயில் வாட்டி வதைக்கிறது. அதனால், வனப்பகுதியில் காட்டுத்தீ பரவும் அபாயம் உள்ளது. எனவே நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் கோடைக்காலம் முடியும் வரை, மலையேற்ற பயிற்சிக்கு வனத்துறை தடை விதித்து உள்ளது.
மலையேற்ற பயிற்சிக்கு தடை
இது குறித்து நாமக்கல் வனச்சரகர் பெருமாள் கூறியதாவது:-
கொல்லிமலையில் காரவள்ளி ஏணிக்கல் தடம், புளியங்சோலை, எருமப்பட்டி, முள்ளுக்குறிச்சி, பேளுக்குறிச்சி அடுத்த பழனியப்பர் கோவில் பகுதிகளில் மலையேற்ற பயிற்சிக்கான பாதைகள் உள்ளன. தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் வனப்பகுதியில், காட்டுத்தீ பரவும் அபாயம் உள்ளது.
மலையேற்ற பயிற்சியில் ஈடுபடுபவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, 3 மாதத்துக்கு மலையேறும் பயிற்சிக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து மலைப்பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. வனத்துறையினர் அனுமதியின்றி மலையேற்ற பயிற்சியில் ஈடுபட்டால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.