ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் எதிரொலி: குமரியில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு பன்றிகளை கொண்டு செல்ல தடை எல்லையில் தீவிர கண்காணிப்பு


ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் எதிரொலி: குமரியில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு பன்றிகளை கொண்டு செல்ல தடை எல்லையில் தீவிர கண்காணிப்பு
x

நீலகிரியில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் எதிரொலியால் குமரியிலும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து வெளிமாவட்டங்களுக்கு பன்றிகளை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி

களியக்காவிளை:

நீலகிரியில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் எதிரொலியால் குமரியிலும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து வெளிமாவட்டங்களுக்கு பன்றிகளை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல்

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் கடந்த ஒரு வாரமாக காட்டு பன்றிகள் அடுத்தடுத்து இறந்த வண்ணம் இருந்தது. பின்னர் அவற்றின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்த போது ஆப்பிரிக்க பன்றி காய்ச்சலுக்கு 27 காட்டு பன்றிகள் உயிரிழந்தது தெரிய வந்தது.

அதைத்தொடர்ந்து தமிழ்நாட்டு எல்லைப்பகுதியில் வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

கண்காணிப்பு முகாம்

அதன்படி நேற்று களியக்காவிளை சோதனைச்சாவடி அருகே கால்நடை பராமரிப்பு துறை சார்பில் கண்காணிப்பு முகாம் தொடங்கியது. முகாமை மண்டல இணை இயக்குனர் டாக்டர் பாரிவேந்தன் தொடங்கி வைத்தார்.

இதில் துணை இயக்குனர் டாக்டர் முருகேசன், உதவி இயக்குனர்கள் டாக்டர் சந்திரசேகர்,டாக்டர் எட்வர்ட் தாமஸ், கால்நடை உதவி டாக்டர்கள் ஷீபா, டால்பின் பெனடிக்ட், உதவி ஆய்வாளர் டாக்டர் பால் மனோகர், கால்நடை பராமரிப்பு உதவியாளர் ராஜேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பாதிப்பு இல்லை

மண்டல இணை இயக்குனர் டாக்டர் பாரிவேந்தன் நிருபர்களிடம் கூறியதாவது:-

குமரி மாவட்டத்தில் அருமனை, தோவாளை, மார்த்தாண்டம், செண்பகராமன்புதூர் உள்ளிட்ட 38 பகுதிகளில் பன்றிப்பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பண்ணைகளில் நேரடியாக சென்று ஆய்வு நடத்தி வருகிறோம். 38 பண்ணைகளிலும் 4180 பன்றிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்த பன்றிகள் எதுவும் இதுவரை பாதிக்கப்படவில்லை. வளர்ப்பு பன்றிகளையும், காட்டுப்பன்றிகளையும் தீவிரமாக கண்காணிக்க வேண்டியுள்ளது.

சோதனை தீவிரம்

வனப்பகுதிகளில் ஏற்கனவே பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன் காட்டுப்பன்றிகள் நடமாட்டத்தையும் கண்காணித்து வருகிறோம். குமரி மாவட்டத்தின் எல்லை பகுதியான களியக்காவிளையில் சோதனைகளை தீவிரமாக்கியுள்ளோம்.

பன்றிகளை உயிருடனோ, இறைச்சியாகவோ குமரி மாவட்டத்தில் இருந்து வெளியே கொண்டு செல்ல தடை விதித்துள்ளோம். பண்ணைகளில் வளர்க்கப்படும் பன்றிகளும் சரி, காட்டுப்பன்றிகளும் சரி உயிரிழந்த நிலையில் எங்காவது காணப்பட்டால், பொதுமக்கள் 9443453731 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் அளிக்க வேண்டும். அதற்கு பிறகு நோய் புலனாய்வு பிரிவுக்கு அனுப்பி வைத்து நோய் தாக்குதல் ஏதேனும் உள்ளதா? என ஆராயப்படும். பன்றிகள் மூலம் பரவும் இந்த நோய், இதர கால்நடைகளுக்கோ மனிதர்களுக்கோ பரவாது. பன்றிகளுக்கு மட்டுமே பரவும். பன்றிப்பண்ணைகளில் வெளி நபர்கள் நடமாடவும், ஓட்டல் கழிவுகளை பன்றிகளுக்கு உணவாக கொடுப்பதையும் தவிர்க்க வேண்டும் என பன்றிப்பண்ணை நடத்துபவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கிருமிநாசினி தெளிப்பு

இதற்கிடையே களியக்காவிளை சோதனைச்சாவடியில் பணியில் ஈடுபட்டு வரும் கால்நடைத்துறை அதிகாரிகள் வாகனங்களை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். பன்றிகள் உயிருடனோ, இறைச்சியாகவோ கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகின்றனவா? என அனைத்து வாகனங்களையும் சோதனை செய்தனர். மேலும் கேரளாவில் இருந்து குமரிக்கு வரும் வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.


Next Story