வாழைத்தார் விலை அதிகரிப்பு
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாழைத்தார் விலை அதிகரித்து உள்ளது.
பொள்ளாச்சி,
பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டில் வாரந்தோறும் புதன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வாழைத்தார் ஏலம் நடைபெறும். அதன்படி நேற்று முன்தினம் வாழைத்தார் ஏலம் நடைபெற்றது. இதற்கிடையில் பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதன் காரணமாக மார்க்கெட்டில் நேற்று சிறப்பு வாழைத்தார் ஏலம் நடைபெற்றது. பொங்கல் பண்டிகை வருவதால் கடந்த வாரத்தை விட வாழைத்தார் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வரத்து அதிகரித்தும், கூடுதல் விலைக்கு ஏலம் போனது. இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:-
பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து பூவன்தார் கொண்டு வரப்படுகிறது. செவ்வாழை உள்ளிட்ட மற்ற வாழைத்தார்கள் ஆனைமலை, நாராயணசெட்டிபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏலத்திற்கு கொண்டு வரப்பட்டன. நேற்று (நேற்று முன்தினம்) நடந்த ஏலத்திற்கு 1,500 வாழைத்தார்கள் கொண்டு வரப்பட்டன. ஆனால் இன்று (நேற்று) நடந்த சிறப்பு ஏலத்திற்கு 2 ஆயிரம் வாழைத்தார்கள் கொண்டு வரப்பட்டது. வரத்து அதிகரித்தும் கூடுதல் விலைக்கு ஏலம் போனது. வாழைத்தார் ஏலம் கிலோவுக்கு பூவன்தார் ரூ.35-க்கும், கற்பூரவள்ளி ரூ.30-க்கும், செவ்வாழை ரூ.50-க்கும், கதளி ரூ.42-க்கும், மோரீஸ் ரூ.30-க்கும், ரஸ்தாலி ரூ.35-க்கும் ஏலம் போனது. கடந்த வாரத்தை விட கிலோவுக்கு விலை ரூ.5 அதிகரித்து இருந்தது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.