விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வாழைத்தார்கள் விலை உயர்வு
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வாழைத்தார்கள் விலை உயர்ந்துள்ளது.
கரூர் மாவட்டம் மரவாபாளையம், நொய்யல், குளத்துப்பாளையம், வேட்டமங்கலம், குந்தாணிபாளையம், ஓலப்பாளையம், ஒரம்புப்பாளையம், நல்லிக்கோவில், பேச்சிப்பாறை, நடையனூர், கரைப்பாளையம், திருக்காடுதுறை, தவிட்டுப்பாளையம், நஞ்சைபுகழூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பில் விவசாயிகள் பூவன், ரஸ்தாலி, பச்ச நாடன், கற்பூரவள்ளி, மொந்தன் உள்ளிட்ட பல்வேறு ரகமான வாழைகளை பயிரிட்டுள்ளனர். வாழைத்தார்கள் நன்கு விளைந்தவுடன் கூலி ஆட்கள் மூலம் வாழைத்தார்களை வெட்டி உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். அதேபோல் வியாபாரிகள் வாழை தோப்புகளிலேயே நேரடியாக வாங்கி செல்கின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக தார் ஒன்று ரூ.450-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் அதிகபட்சமாக தார் ஒன்று ரூ.350-க்கும், பச்சை நாடன் வாழைத்தார் அதிகபட்சமாக தார் ஒன்று ரூ.250-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் தார் ஒன்று ரூ.350-க்கும், மொந்தன் வாழைத்தார் ரூ.400-க்கும் வாங்கிச் சென்றனர். நேற்று பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக தார் ரூ.650-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் ரூ.450-க்கும், பச்சநாடன் வாழைத்தார் ரூ.300-க்கும், கற்பூரவள்ளி ரூ.500-க்கும், மொந்தன் ரூ.700-க்கும் வாங்கிச் சென்றனர். வரத்துக்குறைவாலும், இன்று (புதன்கிழமை) விநாயகர் சதுர்த்தி விழாவாலும் வாழைத்தார் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.