தண்ணீரின்றி காய்ந்து கிடக்கும் பண்டரக்கோட்டை, கோட்டலாம்பாக்கம் ஏரிகள்


தண்ணீரின்றி காய்ந்து கிடக்கும் பண்டரக்கோட்டை, கோட்டலாம்பாக்கம் ஏரிகள்
x
தினத்தந்தி 19 Feb 2023 6:45 PM GMT (Updated: 19 Feb 2023 6:45 PM GMT)

வாய்க்கால்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் பண்டரக்கோட்டை, கோட்டலாம்பாக்கம் ஏரிகளுக்கு நீர்வரத்து இல்லை. இதனால் ஏரிகள் தற்போது தண்ணீரின்றி காய்ந்து கிடப்பதால் விவசாய பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கடலூர்

புதுப்பேட்டை,

புதுப்பேட்டை அருகே பண்டரக்கோட்டை, கோட்டலாம்பாக்கம் ஆகிய பகுதிகளில் ஏரிகள் உள்ளன. இந்த 2 ஏரிகளின் நீரை பயன்படுத்தி அப்பகுதியில் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் விவசாயம் செய்து வந்தனர். மேலும் ஏரி மூலம் குடிநீர் பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டு வந்தது. பொதுமக்களின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கி வந்த இந்த ஏரிகளை பராமரிக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. குறிப்பாக ஏரிகளுக்கு வரும் நீர்வரத்து வாய்க்கால்களை தூர்வாரி பராமரிக்கவில்லை.

இதனால் வாய்க்கால்களை ஆங்காங்கே சிலர் ஆக்கிரமித்து பயன்படுத்தி வருகின்றனர். சில இடங்களில் வாய்க்கால் இருப்பது தெரியாத அளவுக்கு அதனை முழுமையாக ஆக்கிரமித்துள்ளனர். மேலும் செடி, கொடிகளும் ஆக்கிரமித்து வளர்ந்துள்ளன.

தண்ணீர் வீணானது

இதனால் மழை நீர் வாய்க்கால் வழியாக ஏரிகளுக்கு செல்லாமல் சாலையிலும், தரிசு நிலங்களிலும் பாய்ந்து வீணாகியது. இது குறித்து புகார் அளித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதனை கண்டு கொள்ளவில்லை. இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு புதுப்பேட்டை பகுதியில் பரவலாக மழை பெய்தது. இதனால் பெரும்பாலான ஏரிகளுக்கு நீர்வரத்து இருந்தது. இதனால் அந்த ஏரிகளில் தற்போது நீர் அதிக அளவு இருப்பதால் அப்பகுதியில் விவசாய பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் வாய்க்கால் ஆக்கிரமிப்பால் பண்டரக்கோட்டை மற்றும் கோட்டலாம்பாக்கம் ஏரிகளுக்கு நீர்வரத்து இல்லாமல் போய்விட்டது.

இதனால் அந்த ஏரிகள் தற்போது நீரின்றி பாலைவனம் போல் காட்சி அளிக்கிறது. இதன் காரணமாக அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் நிலத்தடி நீர் மட்டமும் படிப்படியாக குறைந்து வருவதால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் உருவாகியுள்ளது.

அதிகாரிகள் அலட்சியம்

இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், பண்டரக்கோட்டை, கோட்டலாம்பாக்கம் நீர் வரத்து வாய்க்கால்களை பலர் ஆக்கிரமித்து பயன்படுத்தி வருகின்றனர். இதனை அகற்றி வாய்க்கால்களை தூர்வார வேண்டும் என பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தோம். இருப்பினும் அதிகாரிகளின் அலட்சியத்தால் வாய்க்கால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. இதனால் கடந்த பருவமழையின் போது, மழைநீரை ஏரியில் தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதன் காரணமாக தற்போது ஏரிகள் தண்ணீர் இன்றி காய்ந்து கிடக்கிறது. ஏரிகளில் தண்ணீர் இல்லாததால் விவசாயம் செய்யமுடியவில்லை. இதன் மூலம் எங்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் இதுபோன்று நடைபெறாமல் இருக்க ஏரிக்கு வரும் நீர்வரத்து வாய்க்கால்களை உடனே தூர்வாரி சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story