வேங்கைவயல் விவகாரம்: டி.என்.ஏ பரிசோதனை - இன்று ரத்த மாதிரி சேகரிப்பு


வேங்கைவயல் விவகாரம்: டி.என்.ஏ பரிசோதனை - இன்று ரத்த மாதிரி சேகரிப்பு
x

வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக 11 பேருக்கு டி.என்.ஏ. சோதனை நடத்த புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகேயுள்ள வேங்கைவயல் கிராமத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித மலம் கலந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக 11 பேருக்கு டி.என்.ஏ. சோதனை நடத்த புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் அண்மையில் உத்தரவு பிறப்பித்தது. இந்த சோதனையை புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரியில் நடத்தி அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், வேங்கைவயல் விவகாரத்தில் டி.என்.ஏ பரிசோதனை பரிசோதனை நடத்த இன்று 11 பேரிடம் ரத்த மாதிரி சேகரிக்கப்படுகிறது. காவலர் உள்பட 11 பேரிடம் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ரத்த மாதிரி எடுக்கப்படுகிறது. சென்னையில் நடைபெறும் மரபனு சோதனையின் முடிவுகள் வர சுமார் 3 மாதங்கள் ஆகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

டி.என்.ஏ. பரிசோதனை முடிவில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்தவர்கள் யார் என்ற தகவல் வெளியாகும் என்றும், அதன் மூலம் இந்த பிரச்சினையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story