ரூ.15 லட்சம் வரை மானியத்துடன் வங்கி கடன் உதவி


ரூ.15 லட்சம் வரை மானியத்துடன் வங்கி கடன் உதவி
x
தினத்தந்தி 13 Oct 2023 6:45 PM GMT (Updated: 13 Oct 2023 6:46 PM GMT)

இளைஞர்கள் தொழில் தொடங்க ரூ.15 லட்சம் வரை மானியத்துடன் வங்கி கடன் உதவி வழங்கப்படுகிறது என மாவட்ட தொழில் பயிற்சி மைய திட்ட மேலாளர் தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை

கொள்ளிடம்:

வங்கி கடன் வழங்கும் முகாம்

கொள்ளிடம் அருகே பழையாறு சுனாமி நகரில் மாவட்ட தொழில் பயிற்சி மையம் சார்பில் தொழில் முனைவோர்களுக்கு வங்கிக் கடன் வழங்கும் முகாம் நடந்தது. முகாமிற்கு கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் மூர்த்தி வரவேற்றார். புதுப்பட்டினம் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா கிளை மேலாளர் மகேந்திரகுமார் முன்னிலை வகித்தார்.

மாவட்ட தொழில் பயிற்சி மைய திட்ட மேலாளர் சரவணன் கலந்து கொண்டு தொழில் முனைவோர்களுக்கு விண்ணப்ப படிவங்களை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

30 சதவீத மானியம்

இளைஞர்களுக்கு தொழில் தொடங்குவதற்கு வங்கி கடனுடன் தமிழக அரசு மானியம் வழங்குகிறது. 25 அல்லது 35 சதவீதம் வங்கிக்கடனுடன் அரசு மானியம் வழங்குகிறது. பெட்டிக்கடை, காய்கறி கடை உள்ளிட்ட கடை வைத்து நடத்துவதற்கு அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை அரசு 25 அல்லது 30 சதவீத மானியத்துடன் வங்கி கடன் வழங்குகிறது.

அதற்கு குறைந்தபட்ச கல்வி தகுதி 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 15 வயதில் இருந்து 55 வயதுக்கு கீழ் இருக்க வேண்டும். உணவு பதப்படுத்தும் தொழிலுக்கு ரூ.10 லட்சத்திற்கும் மேல் மானியத்துடன் வங்கி கடன் வழங்கப்படுகிறது.

விண்ணப்பம்

தொழில் முனைவோர்கள் அரசு மானியத்துடன் அரசு வங்கி கடனை பெற்று சரியான முறையில் திருப்பி செலுத்தி வங்கியின் சேவையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல் கடலோர திருமுல்லைவாசல் கிராமத்தில் நடைபெற்ற கடன் வழங்கும் நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டு மானியத்துடன் வங்கி கடன் வேண்டி விண்ணப்பம் செய்தனர்.


Next Story