வங்கி கடன் திட்டங்களை முறையாக பயன்படுத்த வேண்டும்
சுயதொழில் தொடங்க ஆர்வமுள்ளோர் வங்கி கடன், அரசு மானியக்கடன் திட்டங்களை முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கலெக்டர் பழனி அறிவுரை கூறினார்.
விழுப்புரம்:
விழுப்புரத்தில் மாவட்ட தொழில் மையம் சார்பில் கடன் வசதியாக்கல் முனைப்பியக்கத்தின் சார்பில் தொழில் முனைவோருக்கு கடன் ஒப்பளிப்பு ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு கலெக்டர் சி.பழனி தலைமை தாங்கி பேசியதாவது:- தமிழ்நாடு அரசு, எம்.எஸ்.எம்.இ. நிறுவனங்களின் வளர்ச்சிக்காக மாநில வங்கியாளர் குழுவை வலியுறுத்தி இவற்றுக்கான மாநில கடன் இலக்கை ரூ.2¾ லட்சம் கோடியாக நிர்ணயித்துள்ளது. இதில் விழுப்புரம் மாவட்டத்துக்கான இலக்கு ரூ.2 ஆயிரத்து 483 கோடியே 13 லட்சம் ஆகும். கடன் வசதியாக்கல் முனைப்பியக்கத்தின் முதன்மை நோக்கம் எம்.எஸ்.எம்.இ. நிறுவனக்கடன் ஆயினும் பிற முன்னுரிமை கடன்களுக்கும் முக்கியத்துவம் உண்டு. இந்த முனைப்பியக்க காலத்தில் வங்கிகள், நிதி நிறுவனங்கள் 2 ஆயிரத்து 119 எம்.எஸ்.எம்.இ. நிறுவனங்களுக்கு ரூ.111 கோடியே 22 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
தொழில்வளம் மிக்க மாவட்டமாக...
சுயதொழில் தொடங்கும் ஆர்வமுள்ளோர், ஏற்கனவே தொழில் மற்றும் வணிக நிறுவனங்களை நடத்தி வருவோர் யாவரும் வங்கிகளின் கடன் திட்டங்களையும், அரசு தரும் மானியக்கடன் திட்டங்களையும் முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். வங்கிகள், நிதி நிறுவனங்கள், தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு குறிப்பாக குறுந்தொழில் நிறுவனங்களுக்கு தேவையான அளவு மூலதனக்கடன், நடைமுறை மூலதனக்கடன்களை வழங்கி விழுப்புரம் மாவட்டம் தொழில்வளம் மிக்க மாவட்டமாக மாற உதவ வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கடன் உதவி
அதனை தொடர்ந்து சுயவேலைவாய்ப்பு திட்டங்கள் மூலம் 126 பேருக்கு ரூ.6¾ கோடி மானியத்துடன் கூடிய கடனுதவியையும், தாட்கோ மூலம் 153 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 72 லட்சம் மானியத்துடன் கடனுதவியையும், மகளிர் திட்டம் மூலம் 5 ஆயிரத்து 876 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.411 கோடியே 86 லட்சம் கடனுதவியையும், வாழ்ந்து காட்டுவோம் திட்ட இணை மானியத்திட்டத்தின் கீழ் 70 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 59 லட்சம், நுண் நிறுவன நிதியாக 643 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 25 லட்சம் கடனுதவியையும், 45 மாணவர்களுக்கு ரூ.2 கோடியே 63 லட்சம் கல்விக்கடனையும் கலெக்டர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் அருள், இந்தியன் வங்கியின் மண்டல மேலாளர் குமார்துரை, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப்பதிவாளர் இளஞ்செல்வி, கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர் யசோதாதேவி, முன்னோடி வங்கி மேலாளர் ராஜேஷ்வரன், விழுப்புரம் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவன சங்க தலைவர் அம்மன் கருணாநிதி உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.