மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் தொடங்க மானியத்துடன் வங்கி கடன்


மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் தொடங்க மானியத்துடன் வங்கி கடன்
x

விழுப்புரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் தொடங்க மானியத்துடன் வங்கி கடன் வழங்கப்படுவதாக கலெக்டர் மோகன் தெரிவித்துள்ளார்

விழுப்புரம்

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சுயதொழில் தொடங்க கடனுதவி

விழுப்புரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு சுய வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் சிறு மற்றும் குறுந்தொழில், வங்கி கடன் மானியம் வழங்கும் திட்டத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் இருந்து மாற்றுத்திறனாளிகள் பெறும் வங்கி கடன் தொகையில் 3-ல் ஒரு பங்கு மானியம் அல்லது அதிகபட்சம் ரூ.25 ஆயிரம் மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. தற்போது 14 வயதுக்கு மேற்பட்ட மனவளர்ச்சி குன்றியோர், 18 வயதுக்கு மேற்பட்ட புற உலக சிந்தனை அற்றவர்கள் மற்றும் தசை சிதைவு நோயினால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் தொடங்க ஊக்குவித்திடும் வகையில் மாற்றுத்திறனாளிகளின் பெற்றோர்களுக்கு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் இருந்து பெறும் கடன் தொகையில் 20 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.15 ஆயிரம் மானியம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கலாம்

மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-2, பெற்றோர்களின் வங்கி கணக்கு புத்தகம் நகல் ஆகியவைகளுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், கலெக்டர் அலுவலக வளாகம், விழுப்புரம் என்ற முகவரிக்கு தபாலிலோ அல்லது நேரடியாகவோ விண்ணப்பிக்க தெரிவிக்கப்படுகிறது.

எனவே தகுதியுடைய 14 வயதுக்கு மேற்பட்ட மனவளர்ச்சி குன்றியோர், 18 வயதுக்கு மேற்பட்ட புற உலக சிந்தனையற்றவர்கள் மற்றும் தசை சிதைவு நோயினால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளின் பெற்றோர்கள் விண்ணப்பித்து பயனடையலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story