வளர்ப்பு நாயுடன் வீட்டை பூட்டி சீல் வைத்த வங்கி அதிகாரிகள்
வாங்கிய கடனை முறையாக திருப்பி செலுத்தாததால் வளர்ப்பு நாயுடன் வீட்டை பூட்டி வங்கி அதிகாரிகள் சீல் வைத்தனர். 3 மணி நேரத்திற்கு பிறகு நாய் மீட்கப்பட்டது.
வாங்கிய கடனை முறையாக திருப்பி செலுத்தாததால் வளர்ப்பு நாயுடன் வீட்டை பூட்டி வங்கி அதிகாரிகள் சீல் வைத்தனர். 3 மணி நேரத்திற்கு பிறகு நாய் மீட்கப்பட்டது.
வீட்டுக்கடன்
கோவை புலியகுளம் பெரியார் நகரை சேர்ந்தவர் பாபுகுமார் (வயது 39). இவர், கார் சீட் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் 2014-ம் ஆண்டு சென்டிரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் வீட்டு கடன் பெற்றார்.
அவர், வாங்கிய வீட்டுக்கடனை சரியாக திருப்பி செலுத்தவில்லை என தெரிகிறது.
இதனால் அவரது வீடு ஏலத்துக்கு வந்தது. அப்போது வங்கி அதிகாரிகளிடம் வீட்டை தானே வாங்கி கொள்வதாக பாபு குமார் கூறினார். அதை வங்கி அதிகாரிகள் ஏற்க மறுத்தனர்.
இதையடுத்து அந்த வீட்டை ஏலத்தில் விட்டதாக கூறப்படுகிறது.
வளர்ப்பு நாயுடன் வீட்டுக்கு சீல்
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாபுகுமார் கோவை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில், பாபுகுமாரின் வீட்டுக்கு நேற்று முன்தினம் வங்கி அதி காரிகள் போலீசாருடன் வந்தனர். அவர்கள் வீட்டில் இருந்த அனைவரையும் வெளியேற்றினர்.
உடனே வங்கி அதிகாரிகள் அந்த வீட்டை பூட்டி சீல் வைக்க முயன்றனர். அப்போது வீட்டுக்குள் வளர்ப்பு நாய் உள்ளது.
மேலும் தனது வயதான தாயாரின் மருந்து, அத்தியாவசிய பொருட்கள் உள்ளது. அதை எடுத்துக் கொள்ள அனுமதி வேண்டும் என்று வங்கி அதிகாரிகளிடம் பாபுகுமார் கேட்டார்.
போலீசார் பேச்சுவார்த்தை
ஆனால் வங்கி அதிகாரிகள் அதை பொருட்படுத்தாமல் வளர்ப்பு நாய் வீட்டிற்குள் இருந்த போதே பூட்டி சீல் வைத்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பாபுகுமார் மற்றும் குடும்பத்தினர், பாதுகாப்புக்கு நின்ற போலீசாரிடம் முறையிட்டனர்.
ஆனால் அவர்கள் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதைத்தொடர்ந்து பாபுகுமார் ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வங்கி அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
3 மணி நேரத்திற்கு பிறகு மீட்பு
அதை ஏற்றுக் கொண்ட வங்கி அதிகாரிகள், சீல் வைக்கப்பட்ட வீட்டின் கதவை திறந்து வளர்ப்பு நாயை வெளியே எடுத்துக் கொள்ள சம்மதித்தனர்.
இதைத்தொடர்ந்து 3 மணி நேரத்திற்கு பிறகு அந்த வீட்டின் சீல் உடைக்கப்பட்டு வளர்ப்பு நாயை வெளியே எடுத்து வந்து உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.
அதன்பிறகு அந்த வீட்டுக்கு சீல் வைக்கப்பட்டு வங்கி சார்பில் பாதுகாப்புக்கு காவலாளி நியமிக்கப்பட்டார்.
வங்கி கடனை திரும்ப செலுத்தாததால் வளர்ப்பு நாயை வீட்டிற்குள் வைத்து பூட்டி அதிகாரிகள் சீல் வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து ராமநாதபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.