வங்கிகள் அதிக அளவிலான கல்வி கடனுதவிகளை வழங்க வேண்டும்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் அதிக அளவிலான கல்வி கடனுதவிகளை வழங்க வேண்டும் என்று ஆய்வு கூட்டத்தில் கலெக்டர் பேசினார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் அதிக அளவிலான கல்வி கடனுதவிகளை வழங்க வேண்டும் என்று ஆய்வு கூட்டத்தில் கலெக்டர் பேசினார்.
ஆய்வு கூட்டம்
ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், வங்கியாளர்களுக்கான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி பேசியதாவது:-
தமிழ்நாடு அரசின் சார்பாக மக்களுக்கு எண்ணற்ற மானியத்துடன் கூடிய கடனுதவி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டங்கள் அனைத்தையும் முழுமையாக பெற்று மக்கள் பயன்பெற வேண்டும் என்பதே அரசின் முக்கிய நோக்கமாகும்.
தமிழ்நாடு முதல்-அமைச்சரின் சீரிய வழிகாட்டுதலின்படி நிதித்துறை அரசு செயலாளரின் கடிதத்தில் அதிகப்படியான இளைஞர்களை உயர்கல்வி பயில ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட அளவில் குழு அமைத்து 10 மற்றும் 12 -ம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கு உயர் கல்வி பெறுவதற்கான ஆலோசனைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் குறித்த விவரங்களை தெரிவிப்பதுடன், அவர்களுக்கு வங்கிகள் மூலமாக கல்வி கடன்களை பெற்று வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கல்வி கடனுதவிகள்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இதற்காக தனிக்குழு அமைக்கப்பட உள்ளது. வங்கியாளர்கள் இக்குழுவுடன் இணைந்து அதிகப்படியான சிறப்பு கடனுதவி முகாம்கள் நடத்தி அதிக அளவிலான கல்வி கடனுதவிகளை வழங்க வேண்டும்.
மேலும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் இதுவரை 40 ஆயிரம் விவசாயிகள் கிசான் கிரெடிட் அட்டை பெறவில்லை என தெரிய வருகிறது. கிசான் கிரெடிட் அட்டை பெறுவதன் மூலமாக விவசாயிகள் வங்கிகளில் குறைந்த வட்டியிலான மானிய கடன் உதவிகளைப் பெற்று பயனடைய முடியும். எனவே முன்னோடி வங்கி மேலாளர், வேளாண்மை துறை அலுவலர்கள், நபார்டு வங்கியின் பொது மேலாளர் ஆகியோர் ஒன்றிணைந்து கிசான் அட்டை பெறாத விவசாயிகளை கண்டறிந்து முகாம்கள் நடத்தி கிசான் அட்டை வழங்கும் பணிகளை மேற்கொண்டு அடுத்த மாதத்திற்குள் அனைத்து விவசாயிகளுக்கும் கிசான் அட்டை வழங்க வேண்டும்.
நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள்
தாட்கோ கடனுதவி வேண்டி வழங்கப்பட்ட விண்ணப்பங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் வங்கிகளில் நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, நடப்பாண்டில் கடனுதவி வழங்க நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கினை எய்திட முன்னோடி வங்கி மேலாளர் மற்றும் தாட்கோ பொது மேலாளர் ஆகியோர் இணைந்து தாட்கோ கடனுதவிகளை தாமதமின்றி வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மண்டல மேலாளர் பிரச்சன்னகுமார், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ஆனந்தன், முன்னோடி வங்கி மேலாளர் ஸ்ரீ ராம்ஜிகுமார், கூட்டுறவு சங்கங்கள் இணை பதிவாளர் சிவக்குமார், வேளாண்மை இணை இயக்குநர் செல்வராஜ், தாட்கோ மேலாளர் அமுதாராஜ் மற்றும் வங்கி மேலாளர்கள் கலந்து கொண்டனர்.