சத்தியமங்கலம் அருகே பண்ணாரி மாரியம்மன் கோவிலில் இன்று குண்டம் விழா- ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதிக்கிறார்கள்


தினத்தந்தி 4 April 2023 12:15 AM IST (Updated: 4 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சத்தியமங்கலம் அருகே உள்ள புகழ்பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவிலில் இன்று (செவ்வாய்க்கிழமை) குண்டம் விழா நடைபெறுகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.

ஈரோடு

சத்தியமங்கலம்

சத்தியமங்கலம் அருகே உள்ள புகழ்பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவிலில் இன்று (செவ்வாய்க்கிழமை) குண்டம் விழா நடைபெறுகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.

பண்ணாரி குண்டம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே புகழ்பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் குண்டம் திருவிழா நடைெபறும்.

தமிழகம் மட்டுமின்றி கர்நாடகாவில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் கலந்துகொண்டு குண்டம் இறங்குவார்கள். அதிகாலை தொடங்கி மாலை வரை பக்தர்கள் தீமிதித்து வேண்டுதல் நிறைவேற்றுவார்கள். அதன்பின்னர் கால்நடைகளையும் குண்டத்தில் இறக்குவார்கள்.

வீதி உலா

இந்த ஆண்டுக்கான குண்டம் விழா கடந்த 20-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அன்று முதல் பண்ணாரி மாரியம்மன் மற்றும் சருகு மாரியம்மன் உற்சவ சிலைகள் சப்பரத்தில் வைக்கப்பட்டு சத்தியமங்கலத்தை சுற்றியுள்ள கிராமங்களுக்கு வீதி உலாவாக கொண்டு செல்லப்பட்டது.

இதைத்தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியான குண்டம் விழா இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை தொடங்கி மாலை வரை நடைபெறுகிறது.

பாதுகாப்பு பணி

குண்டம் இறங்குவதற்காக வெளிமாவட்டங்கள் மட்டுமின்றி கர்நாடகாவில் இருந்தும் கடந்த 3 நாட்களுக்கு முன்னரே பக்தர்கள் கோவிலுக்கு வரத்தொடங்கி விட்டார்கள். அவர்கள் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டு இருந்த பிரமாண்ட பந்தலில் தங்கிக்கொண்டு, வரிசையில் குண்டம் இறங்க காத்திருந்தனர்.

குண்டம் விழாவை காண பக்தர்கள் பல்வேறு வாகனங்களில் வருவார்கள். அதற்காக கோவிலில் அருகே தற்காலிகமாக வாகன நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரின் 1,650 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story