புகழ் பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா: லட்சக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன்


தினத்தந்தி 5 April 2023 2:38 AM IST (Updated: 5 April 2023 4:32 AM IST)
t-max-icont-min-icon

புகழ் பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவிலில் நடந்த குண்டம் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.

ஈரோடு

சத்தியமங்கலம்

புகழ் பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவிலில் நடந்த குண்டம் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.

பண்ணாரி மாரியம்மன்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே புகழ்பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் இந்த கோவிலில் பிரசித்திபெற்ற குண்டம் விழா நடைபெறுவது வழக்கம். இதில் தமிழகம் மட்டுமின்றி கர்நாடகாவில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.

கொரோனா பரவலுக்கு பிறகு 2-வது ஆண்டாக குண்டம் திருவிழா கடந்த மார்ச் மாதம் 20-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 28-ந் தேதி கம்பம் நடப்பட்டது. தொடர்ந்து அம்மன் வீதி உலா நடந்தது. சத்தியமங்கலம் சுற்று வட்டார கிராமங்களுக்கு அம்மன் சப்பரத்தில் எழுந்தருளினார். அனைத்து பகுதிகளிலும் கிராம மக்கள் வரவேற்பு அளித்து பண்ணாரி மாரியம்மனை வழிபட்டனர். பவானி ஆற்றை பரிசலில் கடந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார் பண்ணாரி மாரியம்மன்.

குண்டம் இறங்கும் நிகழ்ச்சி

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. முன்னதாக நேற்று முன்தினம் குண்டத்துக்கான எரிகரும்புகள் (விறகுகள்) கொண்டு குவிக்கப்பட்டன. பண்ணாரி மாரியம்மன் கோவிலில் குண்டத்துக்கு ஊஞ்ச மர எரிகரும்புகள் மட்டுமே பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. பக்தர்கள் காணிக்கையாகவும் எரிகரும்புகள் வழங்கினார்கள். இரவு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு குண்டம் பற்ற வைக்கப்பட்டது. எரி கரும்புகள் கொழுந்து விட்டு எரிந்து தீக்கனலாக மாறின. அதிகாலை 3 மணி அளவில் குண்டத்துக்கு தேவையான தீக்கனல்கள் குவிந்தன.

அதைத்தொடர்ந்து கோவில் ஊழியர்கள் மற்றும் குண்டம் அமைக்கும் பணியில் ஈடுபடுபவர்கள் மூங்கில் கட்டைகளால் அக்னி துண்டுகளை அடித்து தீக்குண்டம் தயார் செய்தனர். சுமார் 15 அடி நீளம், 6 அடி அகலத்தில் 2 அடி உயரம் அளவுக்கு அக்னி மேடை உருவாக்கப்பட்டது.

தலைமை பூசாரி

இதற்கிடையே அம்மன் அழைத்தல் வழிபாடு தொடங்கியது. கோவிலின் தலைமை பூசாரி ராஜசேகர் தலைமையில் தாரை தப்பட்டைகள் முழங்க, தெப்ப குளம் நோக்கி பொறுப்பாளர்கள் சென்றனர். அங்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அதிகாலை 3.30 மணி அளவில் அம்மன் உத்தரவு கிடைத்தது.

அதைத்தொடர்ந்து கொம்பு வாத்தியங்கள், தாரை -தப்பட்டை மேள தாளங்கள் முழங்க படைக்கலன்களுடன் பூசாரிகள் மற்றும் பக்தர்கள் பண்ணாரி மாரியம்மன் கோவிலுக்கு வந்தனர். அம்மன் சப்பரம் 3.40 மணிக்கு கோவில் வளாகத்துக்கு கொண்டு வரப்பட்டது. சப்பரத்தை முன்னும் பின்னுமாக 3 முறை எடுத்து சென்றனர். பின்னர் சப்பரம் குண்டத்தின் முன் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது.

நேர்த்திக்கடன்

அதிகாலை 3.45 மணிக்கு படைக்கலன் கோவில் வளாகத்துக்கு வந்து சேர்ந்தது. அங்கு நெருப்பு மேடையாக அக்னி குண்டம் தயார் செய்யப்பட்டு இருந்தது. செக்கச்சிவந்த நெருப்பு துண்டுகள் குவிக்கப்பட்ட குண்டத்தை சுற்றி கற்பூரம் ஏற்றி பூஜை செய்யப்பட்டது. குண்டத்தை சுற்றி பூக்கள் தூவப்பட்டன. குண்டத்தின் 4 புறமும் தீபாராதனை காட்டப்பட்டது. சரியாக 4 மணிக்கு தீபாராதனை காட்டிய கையோடு தலைமை பூசாரி ராஜசேகர் அக்னி குண்டத்தில் இறங்கி தீ மிதித்தார். அப்போது கூடி இருந்த பக்தர்கள் பண்ணாரி தாயே, ... அம்மா... என்றும், ஓம் சக்தி...பராசக்தி என்றும் பக்தி கோஷங்களை எழுப்பினார்கள். தொடர்ந்து பூசாரிகள், இசைக்கலைஞர்கள், முக்கிய பிரமுகர்கள் குண்டம் இறங்கினர். அதைத்தொடர்ந்து பக்தர்கள் குண்டம் இறங்க அனுமதிக்கப்பட்டனர்.

ஈரோடு மாவட்டம் உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். கர்நாடகா பக்தர்களும் ஏராளமானவர்கள் வந்து குண்டத்தில் இறங்கி தீ மிதித்தனர். நேற்று மாலை 5 மணி வரை லட்சக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்டனர். குண்டம் விழாவையொட்டி பண்ணாரி மாரியம்மன் கையில் வீணையுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

கால்நடைகள்

குண்டம் திருவிழாவை முன்னிட்டு 4 நாட்களுக்கு முன்னதாகவே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தடுப்பு வேலிகளில் காத்து இருந்தனர். அவர்களுக்கு உணவு, தண்ணீர் வசதிகள் செய்யப்பட்டு இருந்தன. இறுதியில் மாடுகள், குதிரைகள் போன்ற கால்நடைகள் குண்டத்தில் இறக்கப்பட்டன.

இன்று (புதன்கிழமை) திருவிளக்கு பூஜை நடக்கிறது. நாளை (வியாழக்கிழமை) மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. 7-ந் தேதி தங்கத்தேர் புறப்பாடு உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. 10-ந் தேதி மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது.

பாதுகாப்பு

குண்டம் திருவிழாவை முன்னிட்டு ஈரோடு மாவட்ட கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி தலைமையில் வருவாய்த்துறை சார்பில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன. கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக நூற்றுக்கணக்கான சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன், திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் ஆகியோர் தலைமையில் 3 ஆயிரத்து 300 போலீசார், ஊர்க்காவல் படையினர், தேசிய மாணவர் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஈரோடு, திருப்பூர், நீலகிரி, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.

ஈரோடு மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் ஏ.கனகேஸ்வரி, பாலமுருகன், சத்தியமங்கலம் போலீஸ் உதவி சூப்பிரண்டு அய்மன் ஜமால், துணை சூப்பிரண்டுகள் ஆறுமுகம், பவித்ரா, தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் கண்ணன், இன்ஸ்பெக்டர்கள் நிர்மலா, தீபா, முருகையன், முத்துப்பாண்டி உள்பட அதிகாரிகள் பணியில் இருந்தனர். கோவிலையொட்டி உள்ள பகுதிகளில் மட்டும் 1000-க்கும் மேற்பட்ட போலீசார் பணியில் ஈடுபட்டனர். பக்தர்கள் குண்டத்தில் இறங்கும் போது கவனமாக இருக்கும்படி போலீசார் தமிழ் மற்றும் கன்னட மொழியில் எச்சரிக்கை அறிவிப்பு செய்தனர்.

முன்னதாக நேற்று முன்தினம் கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி.சுதாகர், கோவை சரக போலீஸ் டி.ஐ.ஜி. விஜயகுமார் மற்றும் உயர் அதிகாரிகள் பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டனர்.

எம்.எல்.ஏ. தீ மிதித்தார்

பவானிசாகர் தொகுதி எம்.எல்.ஏ. பண்ணாரி குண்டத்தில் இறங்கி தீ மிதித்தார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கனகேஸ்வரி, ரித்திக் ஆஸ்பத்திரி டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமாரின் மனைவி ஸ்ரீவித்யா மற்றும் முக்கிய பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் குண்டம் இறங்கினர். விழாவில் தொழில் அதிபர்கள் என்.பி.டி.எம்.கோபு, சுந்தர் ஆகியோரும் பங்கேற்று சாமி கும்பிட்டனர்.

கைக்குழந்தைகளுடன் பலரும் தீ மிதித்து நேர்ச்சை நிறைவேற்றினார்கள். திருநங்கைகள், முதியோர், மாற்றுத்திறனாளிகளும் தீ மிதித்தனர். நீதிபதிகள், போலீஸ் அதிகாரிகள், வனத்துறை அதிகாரிகள், சிறப்பு இலக்குப்படை வீரர்கள், தீயணைப்பு வீரர்கள், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகளும் குண்டம் இறங்கி அம்மனை வழிபட்டனர்.

நேற்று குண்டத்தில் பக்தர்கள் இறங்கிக்கொண்டு இருந்தபோது அதிகாலை 5.30 மணி அளவில் லேசான சாரல் மழை விழுந்தது. ஆனால் உடனடியாக அந்த சாரலும் நின்றுவிட்டது. இதுபோல் பகல் 11 மணி அளவில் லேசான தூறல் விழுந்தது. இதனால் பக்தர்கள் குண்டம் இறங்குவதில் பாதிப்பு ஏற்படவில்லை.

1 More update

Next Story