பண்ணாரி மாரியம்மன் கோவிலில் நாளை மறுபூஜை
பண்ணாரி மாரியம்மன் கோவிலில் நாளை மறுபூஜை
சத்தியமங்கலம்
பண்ணாரி மாரியம்மன் கோவிலில் நாளை (திங்கட்கிழமை) நடக்கும் மறுபூஜையுடன் திருவிழா முடிவடைகிறது.
குண்டம் திருவிழா
சத்தியமங்கலத்தை அடுத்துள்ளது பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில். இங்கு அரசு விடுமுறை நாட்கள், ஞாயிற்றுக்கிழமை, வெள்ளிக்கிழமை, திங்கட்கிழமை மற்றும் அமாவாசை, பவுர்ணமி, பண்டிகை நாட்களிலும் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வந்து அம்மனை வழிபட்டு செல்வார்கள்.
இந்த கோவிலில் குண்டம் திருவிழா கடந்த மார்ச் மாதம் 20-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து பண்ணாரி மாரியம்மன், சருகு மாரியம்மன் சப்பரம் வீதி உலா, கம்பம் சாட்டு விழா நடந்தது. அதைத்தொடர்ந்து கடந்த 4-ந் தேதி முக்கிய நிகழ்வான குண்டம் திருவிழா நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்தனர்.
மஞ்சள் நீராட்டு
5-ந் தேதி மாலை பவுர்ணமி திருவிளக்கு பூஜையும், இரவு 10 மணிக்கு மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த புஷ்பரதம் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும் உலா வந்தது. 6-ந் தேதி மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. அப்போது பக்தர்கள் ஒருவருக்கொருவர் மஞ்சள் நீரை ஊற்றியும், வண்ணக் கலவைகளை பூசியும் கொண்டாடி மகிழ்ந்தார்கள்.
நேற்று முன்தினம் இரவு 6 மணிக்கு தங்க தேரோட்டம் நடைபெற்றது. இதில் கோவில் செயல் அலுவலர் மேனகா மற்றும் பரம்பரை அறங்காவலர்கள், கோவில் பணியாளர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.
மறுபூஜை
நேற்று காலை ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடனுக்காக மிளகு மற்றும் உப்பு கலந்து தூவி அம்மனை வழிபட்டு சென்றார்கள். அவ்வாறு தூவப்பட்ட உப்பும், மிளகும் மலை போல குவிந்து கிடக்கிறது. நாளை (திங்கட்கிழமை) மறுபூஜை திருவிழா நடைபெற உள்ளது.
இதையொட்டி அன்று அதிகாலை 5 மணி அளவில் நடை திறக்கப்பட்டு மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெறும். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபடுவார்கள். தொடர்ந்து அன்று மாலையில் நடக்கும் மறுபூஜையுடன் திருவிழா முடிவடைகிறது.