தேனி மாவட்டத்தில் கனமழை: கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கால் குளிக்க தடை..!
தேனி மாவட்டத்தில் ஏற்பட்ட கனமழையின் காரணமாக பெரியகுளம் அருகில் உள்ள கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கூடலூர்:
தேனி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக பெரியகுளம், தேவதானப்பட்டி, வடுகப்பட்டி, போடி, ஆண்டிபட்டி, கூடலூர், உத்தமபாளையம் ஆகிய பகுதிகளில் பெய்து வரும் மழையினால் மானாவாரி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கன மழை காரணமாக அணைகளுக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது. முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் நேற்று 127.05 அடியாக இருந்தது. இன்று காலை அணையின் நீர்மட்டம் 127.15 அடியாக உயர்ந்துள்ளது. இதேபோல் நேற்று 553 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 1426 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து 1267 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
கன மழை காரணமாக பெரியகுளம் அருகில் உள்ள கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த அருவிக்கு கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடனும், நண்பர்களுடனும் வந்து குளித்து மகிழ்ந்து சென்றனர்.
தற்போது தேனி மாவட்டத்துக்கு கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாலும், அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதாலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை இந்த தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.