வால்பாறை நகராட்சி நிர்வாகம் சார்பில் பந்துமுனை பேனா ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்


வால்பாறை நகராட்சி நிர்வாகம் சார்பில் பந்துமுனை பேனா ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்
x

வால்பாறை நகராட்சி நிர்வாகம் சார்பில் பந்துமுனை பேனா ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறை நகராட்சி நிர்வாகம் சார்பில் பந்துமுனை பேனா ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.

விழிப்புணர்வு முகாம்

வால்பாறை நகராட்சி நிர்வாகம் சார்பில் பந்துமுனை பேனா ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் மற்றும் என் குப்பை என் பொறுப்பு பணியில் ஈடுபட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டுநலப்பணித்திட்டம், தேசிய மாணவர் படை மாணவ -மாணவிகள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடத்தப்பட்டது. நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவிற்கு தலைவர் அழகுசுந்தரவள்ளி தலைமை தாங்கினார். ஆணையாளர் பாலு முன்னிலை வகித்தார். முகாமிற்கு வந்தவர்களை மேலாளர் சலாவுதீன் வரவேற்றார். முகாமில் சிறப்புரையாற்றிய ஆணையாளர் பாலு வால்பாறை நகராட்சி பகுதியில் பிளாஸ்டிக் ஒழிப்பு நடைமுறை முழுவீச்சில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதற்காக பல்வேறு நடைமுறைகளை கடைபிடித்து வருகிறோம். இதன் பகுதியாக அதிகளவில் பயன்பாட்டில் உள்ள நாம் பெரிதாக கருதாத பந்துமுனை பேனா பயன்பாடு முக்கிய பங்கு வகிக்கிறது. வெறும் 5 ரூபாய் என்று வாங்கி அதிகளவில் பயன்படுத்தி வருகிறோம்.

மை பேனாக்கள்

ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி விட்டு வீசியெறியும் தன்மை கொண்ட பந்துமுனை பேனாக்களை பயன்படுத்துவதன் மூலம் நமக்கே தெரியாமல் அதிகளவிலான பிளாஸ்டிக் கழிவுகளை பூமியில் வீசியெறிந்து வருகிறோம். குறைந்தது ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கான பிளாஸ்டிக் பந்துமுனை பேனாக்களை குப்பையில் வீசி எறிந்து வருகிறோம்.அதற்கு பதிலாக ஒரு முறை மட்டுமே வாங்கி அதை வாழ் நாள் முழுவதும் பயன்படுத்தும் தன்மை கொண்ட மைபேனாக்களை பயன்படுத்தினால் பொருளாதார சிக்கனம் ஏற்படுவதோடு நம்மையும் அறியாமல் பிளாஸ்டிக் ஒழிப்பில் நம்மை ஈடுபடுத்திக் கொள்கிறோம் என்பதை இன்று முதல் உணர்ந்து மை பேனாக்களை பயன்படுத்தி சமுதாயத்திற்கு முன் உதாரணமாக கல்லூரி மாணவ, மாணவிகள் விளங்க வேண்டும் என்றார்.

இதனை தொடர்ந்து என் குப்பை என் பொறுப்பு மக்கள் இயக்க திட்டத்தில் பணியாற்றும் நகராட்சி துப்புரவு பணியாளர்கள், நாட்டுநலப்பணித்திட்டம் மற்றும் தேசிய மாணவர் படை மாணவ -மாணவிகளுக்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் கேடயம், பரிசுகள் வழங்கப்பட்டது.அனைவருக்கும் மை பேனாக்களை நகராட்சி ஆணையாளர் பாலு வழங்கி மைபேனா பயன்பாடு இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

உறுதிமொழி

இறுதியாக பந்துமுனை பேனாக்களை பயன்படுத்த மாட்டோம் மை பேனாக்களையே பயன்படுத்துவோம் என்று அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். விழாவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் பொறுப்பு பேராசிரியர் திருநாவுக்கரசு, நாட்டுநலப்பணித்திட்ட அதிகாரி பேராசிரியர் சங்கர், பள்ளி தலைமை ஆசிரியர்கள் சவ்மியா, மோணிக்கா, நகராட்சி வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

விழா ஏற்பாடுகளை துப்புரவு ஆய்வாளர் செல்வராஜ் தலைமையில் இயக்க பணியாளர்கள் செய்திருந்தனர்.


Next Story