குற்றங்கள் செய்யும் வக்கீல்களுக்கு பார் கவுன்சில் துணை போகக்கூடாது- ஐகோர்ட்டு நீதிபதி பேச்சு


குற்றங்கள் செய்யும் வக்கீல்களுக்கு பார் கவுன்சில் துணை போகக்கூடாது- ஐகோர்ட்டு நீதிபதி பேச்சு
x

குற்றங்கள் செய்யும் வக்கீல்களுக்கு பார் கவுன்சில் துணை போகக்கூடாது என்று திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க ஆண்டு விழாவில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி எம்.நிர்மல்குமார் பேசினார்.

திருச்சி

குற்றங்கள் செய்யும் வக்கீல்களுக்கு பார் கவுன்சில் துணை போகக்கூடாது என்று திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க ஆண்டு விழாவில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி எம்.நிர்மல்குமார் பேசினார்.

ஆண்டு விழா

திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க 46-வது ஆண்டு விழா திருச்சியில் நேற்று மாலை நடைபெற்றது. விழாவுக்கு சங்க தலைவர் முல்லை சுரேஷ் தலைமை தாங்கினார். செயலாளர் வெங்கட் வரவேற்றார். அரசு வக்கீல்கள் சவரிமுத்து, மோகன், திருச்சி பார் அசோசியேசன் தலைவர் பாலசுப்பிரமணியன், செயலாளர் கண்ணன், மகளிர் பார் அசோசியேசன் தலைவர் ராஜேஸ்வரி, செயலாளர் ஜெயந்திராணி, சிட்டி வக்கீல் சங்க தலைவர் புஷ்பராஜ், செயலாளர் முத்துமாரி, திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க பொருளாளர் கிஷோர்குமார் மற்றும் மூத்த வக்கீல்கள் முன்னிலை வகித்தனர்.

வாழ்நாள் சாதனையாளர் விருது

சிறப்பு விருந்தினர்களாக சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் முரளிசங்கர், எஸ்.ஸ்ரீமதி, திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதி கே.பாபு ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் உள்ளிட்ட பலர் வாழ்த்தி பேசினார்கள்.

விழாவில் மூத்த வக்கீல் டி.ஸ்டானிஸ்லாஸ்-க்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை ஐகோர்ட்டு நீதிபதி எம்.நிர்மல்குமார் வழங்கி பேசியதாவது:-

இளம் வக்கீல்கள் 3 ஆண்டுகளுக்கு பணத்தை எதிர்நோக்கி வேலை செய்யக்கூடாது. உங்கள் மூத்த வக்கீல்கள் எவ்வாறு வாதாடுகிறார்கள் என்று தினமும் பார்த்து கற்று தெரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுகளில் வாய்தா, ஜாமீன் மனு போன்றவற்றை தாக்கல் செய்யும் முன் அந்த வழக்கை பற்றி முழுமையாக கற்றுக்கொண்டு வர வேண்டும்.

அப்போது தான் நீதிபதிகள் கேட்கும் கேள்விகளுக்கு சரியாக பதில்கூறி உங்கள் கட்சிக்காரருக்கு சாதகமான உத்தரவுகளை பெற்றுக்கொடுக்க முடியும். எந்த வழக்காக இருந்தாலும் அதன் உண்மை தன்மையை அறிந்து, அந்த உண்மையின் பக்கம் நின்று வாதிட வேண்டும். திருச்சி மாவட்ட கோர்ட்டுகளில் தான் தரமான தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அதற்கு எனது பாராட்டுக்கள்.

உறுதியாக இருக்க வேண்டும்

போலி வக்கீல்களை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது போல், சட்ட விதிகளை மீறி பொது சொத்துகளை ஆக்கிரமித்தல், பிற குற்றங்கள் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் வக்கீல்களுக்கு பார் கவுன்சில் துணை நிற்கக்கூடாது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 5 சதவீத வக்கீல்கள் செய்யும் தவறு, 95 சதவீத வக்கீல்களுக்கும் அவப்பெயர் ஏற்படுகிறது.

இளம் வக்கீல்களை வழிநடத்துவதிலும், தவறு செய்யும் வக்கீல்களை தண்டிப்பதிலும் பார்கவுன்சில் உறுதியாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இழந்தவற்றை பெற முடியாது

ஐகோர்ட்டு நீதிபதி கே.முரளிசங்கர் பேசும் போது, போக்சோ வழக்குகளில் அரசு தரப்பு, எதிர்தரப்பு, நீதிமன்றம் என்று முத்தரப்பும் கவனமாக இருந்தால் தவறு செய்யாத நபர்கள் தண்டிக்கப்படும் நிலை இருக்காது. ஏனெனில், இத்தகைய வழக்குகளில் பாதிக்கப்படும் நபர் சமூகத்திலிருந்து, வீட்டிலிருந்தும், குடும்ப உறவுகளில் இருந்தும் ஒதுக்கப்படும் நிலை உருவாகும். வழக்குப்பதிவு செய்து பின்னர் குற்றமற்றவர் என விடுதலையானால், மீண்டும் அவர் இழந்தவற்றை பெற முடியாது. குறிப்பாக இளம்வக்கீல்கள் மூத்தவர்களின் அனுபவங்களை நேரடியாக பெற்று பணிபுரிய வேண்டும். மருத்துவமும், சட்டமும் தினந்தோறும் கற்றுக்கொள்ள வேண்டிய தொழிலாக உள்ளது என்றார்.

விழாவில் திருச்சி மாவட்ட நீதிபதிகள், சார்பு நீதிபதிகள், மாஜிஸ்திரேட்டுகள், வக்கீல்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் துணைத்தலைவர் பாபு நன்றி கூறினார்.


Related Tags :
Next Story