தூத்துக்குடியில் விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை


தூத்துக்குடியில் விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை
x

பலத்த காற்று எதிரொலியாக தூத்துக்குடியில் விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை.

தூத்துக்குடி

தமிழகத்தில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை, தூத்துக்குடி உள்ளிட்ட சில மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து இருந்தது. அதேபோன்று குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தமிழக கடலோர பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும், அந்த பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்து இருந்தது.

இதையடுத்து தூத்துக்குடி மீன்வளத்துறை உதவி இயக்குனர் சார்பில் மீனவர்களுக்கு வானிலை எச்சரிக்கை குறித்து தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் உள்ள விசைப்படகுகளில் மீனவர்கள் நேற்று மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதனால் சுமார் 245 விசைப்படகுகள் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. அதே நேரத்தில் நேற்று காலையில் மாவட்டத்தில் கடும் வெயில் மக்களை வாட்டி எடுத்தது. மதியத்துக்கு பிறகு வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. ஆனால் மழை பெய்யவில்லை. நேற்று முன்தினம் மாவட்டத்தில் சில இடங்களில் பரவலாக மழை பெய்தது. காடல்குடியில் 13 மி.மீட்டரும், சூரங்குடியில் 15 மி.மீட்டரும், ஸ்ரீவைகுண்டத்தில் 1.2 மி.மீட்டரும், தூத்துக்குடியில் 19 மி.மீட்டர் மழையும் பதிவானது.


Next Story